Type Here to Get Search Results !

காஞ்சி பெரியவரின் முத்தான அருளுரைகள்

காஞ்சி மகான் பொன்மொழிகள்
காஞ்சி மகான் 


நல்லதை மட்டும் நினையுங்கள்


* ஊர் கூடி தேர் இழுத்தால் தான் தேர் நகரும். அதுபோல, கடினமான செயலை நிறைவேற்ற பலரின் உதவியைப் பெற வேண்டியிருக்கும்.

* ஒவ்வொருவரும், தங்கள் வருமானத்தின் ஒரு பகுதியை கடவுளுக்கு அர்ப்பணிக்க வேண்டும்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால் வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும். 

* சாதாரண மகிழ்ச்சி என்பது சில நிமிடங்களே இருக்கும். எனவே பேரானந்தத்திற்கு மட்டும் ஆசைப்படுங்கள்.

* மதங்களின் லட்சியம் இறைவனை அடைவது மட்டுமே.

* ஆண்டவன் நாம் செய்த பாவத்துக்காக உடலைக் கொடுத்து, துன்பத்தை அனுபவிக்க விடுகிறான். பாவம் செய்யாமல் இருந்தால் மறுபிறவி இருக்காது.

* மனம் எதைத் தீவிரமாக நினைக்கிறதோ அதுவாகவே மாறிவிடும். அதனால், நல்லதையே நினைக்க வேண்டும்.


கல்வியின் நோக்கம் என்ன?


கல்வியின் பயன் மெய்ப்பொருளாகிய ஆண்டவனைத் தெரிந்து கொள்வதுதான். ஆனால், இந்தக்காலத்தில் படிக்கிறவர்கள் பலபேருக்குத் தெய்வ பக்தியே இல்லை. அதுதான் அடிப்படையான குறை.

கல்வியறிவினால் கிடைப்பது அடக்கம். கல்வியின் முதற்பயனாக வினயம் ஏற்பட வேண்டும். இதனால் பழைய நாளில் மாணவனுக்கு 'வினேயன்' என்றே பெயர் இருந்தது. இன்று நிறைய பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. போதாததற்கு 'ஷிப்டு' முறை வேறு வைக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் அடக்கம் ஏற்படவில்லை.

நம்முடைய தேசத்துப் பெண்களின் இயற்கையான குணம் அடக்கம். படிக்கிற பெண்களுக்குச் சுபாவமான அடக்க குணத்தோடு, கல்வியின் பயனாக பின்னும் அதிக அடக்கம் ஏற்பட வேண்டும். ஆனால், சுபாவமாக அடங்கியிருக்கும் பெண்களுக்குக்கூட, அதிகமாகப் படித்துவிட்டால், அந்த சுபாவம் போய்விடுகிறது. குணத்தைக் கொடுக்க வேண்டிய படிப்பு குணத்தைக் கெடுத்து விடுகிறதே! அது ஏன்?

முற்காலத்தில் மாணவர்கள் குருகுல வாசம் செய்தார்கள். அங்கே ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும்? மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்? எல்லாவற்றையும் முன்னோர் வகுத்த நீதிநூல்கள் வகைப்படுத்தி வைத்திருக்கின்றன. மாணவர்கள் குருவுக்கு அடங்கி, பிரம்மச்சாரியக வாழவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்திருக்கிறது. சிஷ்யன் பிச்சை எடுத்துத் தானும் உண்டு, குருவுக்கும் கொண்டு வந்து அளிப்பான். அதனால் அவனுக்கு அகங்காரம் கரைந்து வினயம் ஏற்பட்டது. குருவுடனேயே இருந்ததால், அவரிடம் உண்மையான பிரியம் ஏற்பட்டது. அவருக்கும் இவனிடம் இயல்பாகவே பிரியம் ஏற்பட்டது.


மனநிறைவே தரமான வாழ்க்கை


* அதிகமாகப் பொருள்களைத் தேடிப்போவதால் வாழ்க்கைத்தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி வஸ்துக்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மன நிறைவோடு இருப்பதுதான்.

* நாம் நிலையாக நிற்க வேண்டுமானால் அசையாத ஒன்றைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். அதே போல் மனம் தியானத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், அசையான ஸ்தாணு பரம்பொருளை நினைத்துக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும்.

* நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிற வரையில் நாம் தரித்திரர்கள்தான்.

* சுவரில் எறிந்த பந்து திரும்புவது போல் நிறைவேறாத ஆசையானது கோபமாகத் திரும்பி வந்து நம்மைப் பாபத்தில் தூண்டுகிறது.

* மனுஷன் பழையதற்குப் பரிகாரம் தேடுவதை விடப் புதிய சுமை சேராமல், பாவம் பண்ணாமல், வாழ்வதற்கு ஈஸ்வரனைத் துணை கொள்வதே முக்கியம்.

* அவசியமில்லாமல் ஏராளமாகச் சம்பாதிப்பதும், அவசியமில்லாமல் விரயமாகச் செலவழிப்பதும், அல்லது பூதம் காத்தமாதிரி பாங்கில் மூட்டை மூட்டையாகப் போட்டு வைப்பதும் பிசகு.

* ஓடி ஓடிச் சம்பாதிக்கும் ஒரு காசு கூட உடன் வராது. மறு உலகத்தில் செலாவணி பகவந்நாமா ஒன்றுதான்.

* ஒவ்வொரு மனிதனிலும் ஈஸ்வரன்தான் குடி இருக்கிறார். ஒருவரை நமஸ்கரிக்கும்போது அந்த ஈஸ்வரனையே வழிபடுவதாகத்தான் அர்த்தம்.

* எங்கே நாம் போனாலும் அங்கே நல்ல தினுசான சந்தோஷத்தை விருத்தி பண்ண வேண்டும்.

* ஒழுங்கினாலும் கட்டுப்பாட்டினாலும் மனத்தின் அசுத்தங்களை அகற்ற முடியும்.



எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு


நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும். நாமும் எங்கு போனாலும் செல்லுபடியாகும் நோட்டாக இருக்க வேண்டும். அதாவது, தனக்கும் பிறருக்கும் உபயோகப்படக் கூடிய செயல்களையே செய்ய வேண்டும்.


நமது ஊரில் செல்லுபடியாகும் பணம் ரஷ்யாவில் செல்லாது. அனைத்து ஊருக்கும் ஒரே ராஜா இருந்தால் அவனுடைய முத்திரையுள்ள பணம் எங்கும் செல்லுபடியாகும். இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் ஒரு ராஜா இருக்கிறான். அவன் தான் பரமேஸ்வரன். அவனுடைய சகல ராஜ்யங்களிலும் செல்லும் நோட்டாக சூதர்மம்' இருக்கிறது. ஆகவே, தர்மம் செய்யுங்கள்.

அடுப்பில் தீ மூட்டியிருக்கிறோம். அப்போது மழை பொழிகிறது. நெருப்பு அணைந்துவிடும் போலிருக்கிறது. அந்த சூழலில் எதுவும் செய்யாமல் இருந்துவிட மாட்டோம். இருக்கிற தீப்பொறிகளை விசிறி, சிரமப்பட்டு, மறுபடியும் நெருப்பு பற்றிவிட முயற்சிப்போம். அதேபோல, நம் முன்னோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர்மத்தையும் எந்த சூழ்நிலையிலும் அணைந்துவிடாமல் பாதுகாத்து, எல்லாரிடத்திலும் பரவும்படி செய்ய வேண்டும்.


வரதட்சணை திருட்டு சொத்து 


கல்யாணம் என்பது இக்காலத்தில் அக்கிரமமாக மாறிவிட்டது. நாம் எல்லோரும் பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்கள் தானே! அப்படி இருக்கும் போது பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். பெண்ணின் குலம், குணம் அறிந்து நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். நம்மைப் போல் மருமகளும் பெண் தானே என்று அபிமானமும் அனுதாபமும் பெண்களுக்கு ஏற்பட வேண்டும். ஊரில் எல்லோரும் வரதட்சணை வாங்குகிறார்கள். நாமும் வாங்கினால் தப்பில்லை என்று தாங்களாக நியாயம் கற்பித்துக்கொள்ளக் கூடாது. வெறுமனே சவுந்தர்யலஹரி, அபிராமி அந்தாதி பாராயணம் செய்தால் போதாது. அம்பாளுடைய பிரீதியைப் பெற வேண்டுமானால் வரதட்சணை கேட்டு பெண்வீட்டாரை நிர்பந்தம் செய்யக்கூடாது. நாங்கள் கேட்காமலே பெண் வீட்டில் கொடுத்ததால் வாங்கிக்கொண்டோம் என்று சொல்வதும் தப்பு தான். ஒருத்தர் செய்யும் செயல் செயின் ரியாக்ஷன் போல் பலரையும் பாதிப்பதாக அமைந்து விடுகிறது. வரதட்சணையே வேண்டாம் என்று சொல்வதே உயர்ந்த மனோபாவம். முடிவாக வரதட்சணை நாமாகக் கேட்டாலும் சரி, அவர்களாகக் கொடுத்தாலும் சரி திருட்டுச் சொத்து மாதிரி பயம் வேண்டும்.


குடிநீர் சிக்கனம் வேண்டும்


* மனிதனாகப் பிறப்பதன் நோக்கமே மக்களுக்கு சேவை செய்வது தான். சேவை செய்வது என்பது நமக்கு சம்பந்தமில்லாதவர்களுக்கு செய்வது தான் என்பதில்லை. நம் குடும்பத்திற்கு செய்வதும் சேவை தான் என்பதை உணர வேண்டும்.

* சிக்கனமாய் இருப்பதை கருமித்தனம் என்று சொல்லக்கூடாது. பணம் தான் என்றில்லாமல் நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு விஷயத்திலும் சிக்கனம் தேவை. குடிக்கும் தண்ணீரைக்கூட அளவோடு பயன்படுத்துவது மிகவும் நல்லது. 

* வாழ்க்கைக்கு எது அவசியமோ அதை மட்டும் விரும்பவேண்டும். மற்றவற்றை சிறிதும் அனுபவிக்க ஆசைப்படக்கூடாது. 

* பிறரது குற்றங்குறைகளை மட்டுமே பெரிதுபடுத்திப் பார்ப்பது சிலரது இயல்பாக இருக்கிறது. மற்றவர்களிடம் உள்ள நல்ல அம்சங்களை மட்டுமே காணும் மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

* ஒவ்வொரு நாளும் பத்து நிமிஷமாவது வழிபாட்டுக்காக ஒதுக்க வேண்டும். குடும்பத்தோடு அமர்ந்து வழிபாடு செய்வது சிறப்பு. பக்திக்கு தேவை மனம் தானே தவிர பணம் அல்ல.


"சிவசிவ' என்றால் பிறப்பில்லை


* ஒரு பிறவியில் செய்த பாவத்தை மற்றெரு பிறவியில் தீர்த்துக் கொள்ளட்டும் என்பதற்காக, ஈஸ்வரன் கருணையுடன் மறுபடியும் பிறவியைத் தருகிறான்.

* பகவானிடம் பக்தி உண்டாகவும், அவனது அருள் கிடைக்கவும் முதலில் பிறருக்கு உதவி செய். மனம் பக்குவமடைந்தால் உண்மையான பக்தியும், ஈஸ்வரனின் அருளும் கிடைக்கும்.

* தேசப்பணி, சமூகப் பணியில் ஈடுபடுவதற்கு முன் சமூக சேவையை, தெய்வப்பணியுடன் இணைத்து செய்ய வேண்டும். தெய்வ சம்மதத்துடன் தேசப்பணி செய்யவது நல்லது.

* கோபம், கெட்ட எண்ணம் போன்றவை இல்லாத சாந்தமாக இருக்கும் தட்சிணாமூர்த்தியைப் பார்க்கும் போது நமக்கு சாந்தம் ஏற்படுகிறது.

* ஈஸ்வரனின் அருளைப் பரிபூரணமாகப் பெற்றவன் ஒருவன் இருந்தாலும், அவன் மூலமாகத் தேசம் நலமடையும். அப்போது எது வந்தாலும் பயமில்லை.

* "சிவ' என்ற இரண்டு எழுத்தை எப்போதும் உச்சரிக்க வேண்டும், எந்த பிறவி வந்தாலும் அதை மறக்காமல் கூறினால், பிறவியே இல்லாத அமைதியான நிலை ஏற்படும்.



எளிய வாழ்க்கை வாழுங்கள்


நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே மற்றவர் கள் வாழ வேண்டும் என்று நினைப்பது உத்தமமான எண்ணம். அதே நேரம், ஆசையை வளர்த்துக் கொண்டே போனால் ஆத்ம அபிவிருத்தி என்பதே இல்லாமல் போய்விடும். சவுக்கியம் தேடி அலைவது நம் மனசாந்தியை தொலைப்பதற்கான வழி. எவ்வளவு எளிமையாக வாழ்க்கையை நடத்த முடியுமோ, அவ்வளவு எளிமையாக இருப்பதே முதலில் நாம் கற்றுக் கொள்ளும் விஷயம். வயிற்றுக்கு உணவு, மானத்தை மறைக்க ஆடை, குடியிருப்பதற்கு எளியவீடு இம்மாதிரியான அடிப்படையான தேவைகளை எல்லோரும் பெறவேண்டும். இதற்கு மேல் ஆசைமேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. நாம் எளிமையான வாழ்க்கை வாழ முயற்சிப்பதே உலகத்திற்குச் செய்யும் மிகப் பெரிய பரோபகாரம். கிணற்றில் நீர் நிரம்பிய குடத்தை இழுக்கும் போது கனம் தெரிவதில்லை. ஆனால், தண்ணீர் மட்டத்திற்கு மேலே குடம் வந்தவுடன் அதன் கனத்தை நம்மால் உணரமுடிகிறது. எளிதில் கொண்டு செல்ல முடியாத பெரியமரங்களை தண்ணீரில் போட்டு இழுப்பது வழக்கம். அதேபோல, நம்மைத் துன்பங்கள் தாக்காமல் இருக்க ஞானம் என்னும் தண்ணீரில் ஆழ்ந்து விட வேண்டும். அப்போது துன்பவிஷயங்கள் இருந்தாலும் அதன் தாக்கம் மனதைத் தொடுவதே இல்லை. நீருக்குள் இருக்கும் குடம் போல அப்போது துன்பம் பரமலேசாகி விடும்.


பாலுக்குள் "இவ்ளோ' இருக்கா ?


* பசு என்றால் நம்மைப்போல் ஒன்றும் அறியாத ஜீவன்கள். அவற்றை பராமரித்து, அவற்றிடம் உள்ள பாலை பயன்படுத்தி, நல்ல பலனைப் பெறுவது எப்படி என்று உபதேசிப்பவன் கோபாலன். 

* நம் மனதிற்கும் பாலுக்கும் ஒற்றுமை பலவுண்டு. முதலில் உள்ளத்தை பால் போல் தூய்மை ஆக்க வேண்டும். கோபாலனை அண்டி பக்தி என்னும் தீயில் அதை பதமாக காய்ச்ச வேண்டும். 

* சாந்தத்தைக் கொண்டு உறை ஊற்றி தயிராக்க வேண்டும். இதயம் என்னும் குடத்தில் தயிர் ஊற்றி அது உறைந்ததும், பக்தியென்ற மத்தைக் கொண்டு கடைந்து, பூத்துவரும் வெண்ணெயைப் போன்ற அனந்தசயனனான பரமபுருஷனைக் காண வேண்டும்.

* தயிரில் பால், வெண்ணெய், நெய் ஆகிய முப்பொருளும் அடங்கியிருந்தாலும், அவற்றை தக்க முறைகள் கொண்டே தனித்தனியாக்க முடியும் என்பது உண்மை. அதைப்போலவே நம் இதயத்தில் உறைந்திருக்கும் கடவுளை காண வேண்டுமானால், தக்க முயற்சிகள் எடுத்தால் தான் இயலும்.


மனதாலும் துன்பம் செய்யாதீர் !


"நியாயம்' என்றால் "முறை' என்று பொருள். எந்தச் செயலையும் முறையுடன் செய்ய வேண்டும். முறைதவறி செய்யும் செயல் களால் துன்பம் தான் உண்டாகும். ஒரே செயல் ஒருவருக்கு நியாயமாகவும், மற்றொருவருக்கு அநியாயமாகவும் தோன்றும். ஆனால், அந்த மாதிரி சமயங்களில் நம்மை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் எல்லோருக்கும் பொதுவான நியாயத்தைப் பின்பற்றுவதே சிறந்ததாகும். 

குரங்கினைப் போன்று சில பக்தர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இறைவனை இறுக்கமாகப் பற்றிக் கொள்வார்கள். அதற்காகத் தான் "குரங்குப்பிடி' என்று குறிப்பிடுவதுண்டு. பகவானே உதற நினைத்தாலும், பக்தியினால் நாம் அவரைக் கவ்விப் பிடித்துக் கொள்ள வேண்டும். இதைத்தான் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் "சிக்கெனப் பிடித்தேன்' என்று குறிப்பிடுவதைக் காணலாம். 

அகிம்சை என்றால் உடலால் பிறருக்கு கஷ்டம் தருவது மட்டுமல்ல. மனதால், பேச்சால், பார்வையால் என்று எந்த ஒரு காரணம் கொண்டும் ஒருவருக்கு துன்பம் விளைவித்தாலும் அது ஹிம்சையாகி விடும். இன்னும் சொல்லப்போனால் நமக்கு துன்பம் தருபவருக்கும் துன்பம் தராமல் அவரிடமும் அன்பு காட்டுவது தான் அகிம்சையின் இலக்கணமாகும்.


குழந்தை மனம் வேண்டும்


வியாதி வந்த பின்பு மருந்து சாப்பிட்டுப் போக்கிக் கொள்ளுவதைக் காட்டிலும் வராமலே தடுத்துக் கொள்ள வேண்டும். அதற்கு உபவாசம் ஒரு பத்தியம். மிகவும் கீழான இடத்தில் மனதை வைத்தால் கீழான பைத்தியம் உண்டாகிறது. மேலான இடத்தில் மனதை வைத்தால் மேலான பிரம்மவித்தாக ஆகிறோம். ஈசுவர சரணாரவிந்தத்தைப் பிடித்தால் நமக்கு அப்படிப்பட்ட உயர்ந்த நிலை உண்டாகும்.

குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தைதான் தெய்வம். அவர்களிடத்தில் காமக்குரோதங்கள் இல்லை. 'குழந்தையாக இரு' என்று உபநிஷத் சொல்லுகிறது.

'சிவ' என்ற இரண்டு அக்ஷரங்களை எப்பொழுது சந்தர்ப்பம் நேர்ந்தாலும் உச்சாடனம் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஜென்மம் வந்தாலும் அதை மறக்காமல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஜென்மமே இல்லாத பரம சாந்த நிலை உண்டாகும்.

ஒரு பிரபுவிடம் இரண்டு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன் எப்பொழுதும் எதிரில் நின்று கொண்டு பிரபுவை ஸ்தோத்திரம் பண்ணிக் கொண்டே இருக்கிறான். மற்றொருவன் பேசவே மாட்டான். பிரபு எந்தக் காரியத்தைச் செய்ய வேண்டுமென்று நினைக்கிறாரோ அந்தக் காரியத்தைச் செய்வான். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, வணங்கிக் கொண்டு நிற்பவன் மீது தான் பிரபு அதிக பிரியம் வைத்துள்ளார் போலும் என கருதுவர். ஆனால், வேலை செய்கிறவனிடத்தில் தான் அவருக்குப் பிரியம் இருக்கும். இது போல் தான் ஈஸ்வரன். வெறும் ஸ்தோத்திரம் செய்கிறவனிடத்தில் மட்டும் அதிகப் பிரியமாக இருப்பான் என்று நினைத்து விடக்கூடாது.


அன்புதான் நிலைத்து நிற்கும்


* மனத்தாலும், வாக்காலும், உடம்பாலும், பணத்தாலும் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும். இதற்கு நம்மிடமுள்ள பணம் எப்போதும் நம்முடையதல்ல என்ற நினைவு முதலில் இருக்க வேண்டும்.

* துணியும், உடம்பும், வீடும் அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. மனம் அழுக்கு இல்லாமல் இருக்க வேண்டும்.

* மனம், வாக்கு, உடம்பு ஆகியவற்றால் செய்யும் செயல்அனைத்தும் தர்மங்களாக இருக்க வேண்டும். நம்முடைய பணத்தை தர்மமாகிய நோட்டாக மாற்றிக் கொண்டால் தர்மம் எந்தக்காலத்திலும் செல்லும்.

* அன்பு செலுத்தாமல் வாழ்ந்தால் ஆனந்தம் இல்லை. அன்பினால் பிறரை மாற்றுவது நமக்குப் பெருமை. அதுதான் நிலைத்தும் நிற்கும்.

* அதிகமாகப் பொருள்களைத் தேடிப் போவதால் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடாது. உண்மையில் வாழ்க்கைத்தரம் என்பது வெளி பொருட்களின் பெருக்கத்தில் இல்லை. தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பதாகும்.

* நாம் செய்யும் தர்மத்திற்கு பலன் கொடுக்க வேண்டியது ஈஸ்வரனின் வேலையாகும்.


நன்றி : தினமலர் 





கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad