Type Here to Get Search Results !

இப்படிக்கு தேவதை முதலாம் பாகம்

 இப்படிக்கு தேவதை முதலாம் பாகம்

இப்படிக்கு தேவதை முதலாம் பாகம்



மறக்க முடியாத வாசகிகளின் கேள்வியும் மருத்துவரின் அருமையான பதில்களும் :-)


{1}


வாசகியின் கேள்வி :- சில சமயங்களில் எனக்கும், என் கணவருக்கும் நடக்கும் வாக்குவாதங்கள் இதன்போது, அவர் என்னை அடிப்பதற்காகக் கையை ஓங்குகிறார்.இது என்னை மிகவும் இழிவுப்படுத்துவதாகத் தோன்றுகிறது.இதுப் போன்ற தருணங்களில் நான் என்ன செய்ய வேண்டும்?


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


ஒரு உறவில் உடல் ரீதியான தாக்குதல் கட்டாயமாகத் தவிர்க்கப்பட வேண்டும்.

உங்கள் கணவர் கையை உயர்த்தும்போது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்று அவரிடம் வெளிப்படையாகப் பேசுங்கள்.நீங்கள் இதைப் பேசும்போது அவரைப் பற்றி எந்த விதத்திலும் விமர்சிக்காமல், நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை மட்டும் கூறுங்கள்.


மேலும் அவரைக் கையை உயர்த்த தூண்டுவது எது? என்று அவரிடம் கேளுங்கள்.

உங்கள் குரல், உடல்மொழி, நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் என அவரைக் கோபப் படுத்துவது எது? என்பதை புரிந்துகொண்டு அதை மாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள்.


கணவன் - மனைவி இடையே ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறலாம்.

அவற்றை வாக்குவாதங்களாக மாற்றாமல் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு இருவருக்குமே உள்ளது.


{2}


வாசகியின் கேள்வி :- எனது கணவர் ஒரு வருடத்திற்கு முன்பு நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது குணமான நிலையில், தொடர்ந்து அதை நினைத்தே கவலைப்பட்டுக் கொண்டு இருக்கிறார். இதை எவ்வாறு சரி செய்வது?


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


முதலில் உங்கள் கணவர் தனது உடல்நிலை குறித்து பயப்படுகிறாரா? அல்லது எச்சரிக்கை உணர்வோடும், விழிப்புணர்வோடும் இருக்கிறாரா? என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவு நோயை முற்றிலுமாகக் குணப்படுத்த முடியாது. உணவு முறை, மருந்து, உடற்பயிற்சி மற்றும் அன்றாட வாழ்வில் மன அழுத்தம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வது போன்ற செயல்களின் மூலம், நீரிழிவு கட்டுப்படுத்த மட்டுமே முடியும்.


மேலே குறிப்பிட்டவற்றை கடைப்பிடிப்பதற்கு முயற்சிப்பதன் காரணமாக, அவர் எப்போதும் விழிப்புணர்வு நிலையிலேயே இருக்கலாம். இது உங்களுக்கும் புதிதாகத் தோன்றலாம்.


தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் கணவரின் உடல்நிலை குறித்து ஆலோசனை பெறுங்கள்.செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து தெரிந்து

கொள்ளுங்கள்.இதன் மூலம் தெளிவு கிடைக்கும்.அதற்குப் பின்னரும் அவரது நிலை இதைப்போன்றே தொடர்ந்து இருந்தால், தயங்காமல் மனநல மருத்துவரை அணுகுங்கள்.


{ 3 }


வாசகியின் கேள்வி :- நான் காதல் திருமணம் செய்தவள்.எனது முதல் மகன் சிறப்புக் குழந்தை (special child) என் உதவியின்றி அவனால் எதுவும் செய்ய முடியாது.

அவன் பிறந்ததிலிருந்து கணவர் என்னிடமோ, மகனிடமோ பெரிதாக அன்பு காட்டுவதில்லை.குடும்பத்தையும் கவனிப்பதில்லை. எனது தேவைகளுக்காக, தாய் வீட்டிலிருந்து பணம் உதவி செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் எனக்கு இரண்டாவது மகன் பிறந்தான்.அவன் ஆரோக்கியமாக இருக்கிறான். இப்போதும் எனது கணவர் எந்த விதத்திலும் குடும்பத்திற்கு உதவுவதில்லை. நான் பட்டப்படிப்பு முடித்திருந்தாலும், குழந்தைகளைக் கவனித்துக் கொள்ள வேண்டி இருப்பதால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தற்போது எனது தாய் வீட்டில் கொடுத்த ஆதரவும் படிப்படியாகக் குறைந்து வருகிறது. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.எனக்கு நல்ல வழி காட்டுங்கள்.


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


உங்கள் குழந்தைக்குச் சிறப்புத் தேவைகள் இருப்பதால், நீங்கள் வெளியே சென்று வேலை செய்ய முடியாமல் போகலாம். இருப்பினும் வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்க உதவும் வணிக வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


உங்கள் பெற்றோர் இடம் இருந்து பணம் உதவி பெறுவதை நிறுத்தவும். அவர்களிடமிருந்து வேறு வகையான உதவியைக் கோர முடியுமா என்பதைப் பார்க்கவும்.உதாரணமாக, நீங்கள் வேலையில் ஈடுபட்டிருக்கும்போது உங்கள் குழந்தைகளில் ஒருவரை உங்கள் பெற்றோர் கவனித்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டுப்பாருங்கள்.உங்கள் கணவரை எதிர் பார்க்காமல் குடும்ப பொறுப்புக்களை நீங்கள் கையில் எடுத்துச் செயல்படுத்துங்கள்.


நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்கள் திட்டம் என்ன? என்பதை அவருக்கு எடுத்துக்கூறுங்கள்.இதில் தன் பங்குக்கு அவரால் என்ன செய்ய முடியும்? என்று கேளுங்கள். குடும்பத்தை நீங்கள் உங்களது கட்டுப்பாட்டில் நிர்வகிக்க ஆரம்பித்துவிட்டிர்கள் என்று உணர்ந்தபின்பு, அவர் நிச்சயம் அதற்கு எதிர் வினையாற்றுவார். அது நல்லதா? கெட்டதா? என்பதைப் பொறுத்து, அவர்மீதான அடுத்த செயல்பாட்டில் ஈடுபடுங்கள்.


{ 4 }


வாசுகியின் கேள்வி :- நான் இல்லத்தரசி. எனது கணவர் விற்பனை துறையில் பணியாற்றுகிறார். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.என் கணவர் எப்போதும் அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வரும்போது மோசமான மனநிலையிலேயே இருக்கிறார். அலுவலகத்தில் ஏதாவது நடந்ததா? என்று நான் கேட்பது கூட அவருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் உங்கள் கணவர் அலுவலக பணிச்சுமை, சக ஊழியர்களுடன் நடந்த விவாதம், போக்குவரத்து நெரிசல் போன்ற பல காரணங்களால் அழுத்தத்துக்கு உள்ளாகி இருக்கலாம்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மனநிலைக்கு அவர் வரும் முன்பே, முதலில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும்.அதற்குள் நீங்கள் கேட்கும் கேள்விகள் நல்ல நோக்கத்துக்காகவே இருந்தாலும், அது அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்.


எனவே சிறிது நேரம் அமைதியாக இருக்கவும்.அவர் உங்களிடம் பகிர்ந்து கொள்ளும்போது அமைதியாகக் கேளுங்கள். அதற்கு முன்பு நீங்களாக எதையும் தீர்மானித்து விடாதீர்கள். அவர் உங்களிடம் பகிரும்போது குறுக்கே கேள்விகளைக் கேட்காதீர்கள். எந்தப் பிரச்சினையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நம்பிக்கையை அவருக்கு ஏற்படுத்துங்கள். ஆறுதலாக இருங்கள். இவ்வாறு செய்தால் அவரது மனநிலை மாறும்.மகிழ்ச்சி உண்டாகும்.


{ 5 }


வாசகியின் கேள்வி :- நான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். திடிரென ஏற்பட்ட விபத்தால் எனது இடது காலில் அடிப்பட்டது. மருத்துவ சிகிச்சைகளின் மூலம் குணமடைந்தேன். இருந்தபோதும் பழைய மாதிரி நடக்க முடியவில்லை.என்னுடன் வேலை செய்யும் பெண் ஒருவர், அவருடைய தோழிகளிடம் எனது நடையைக் காட்டி கேலி கிண்டல் செய்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது அவர் எதுவும் தெரியாது போல் நான் உன்னை கேலி செய்யவில்லை என்று பதில் சொல்லுகிறார். ஆனால் தொடர்ந்து கேலி செய்து வருகிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். அவரை எப்படி எதிர்கொள்வது என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுங்கள்.


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


இயலாமை காரணமாகக் கேலி செய்யப்படுவதால், நீங்கள் அனுபவிக்கும் வலியை என்னால் உணர முடிகிறது.ஆனால் இதற்காக நீங்கள் வருத்தப்படுவது, உங்களைக் கேலி செய்பவர்களை மேலும் ஊக்குவிப்பது போல ஆகிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.உங்கள் குறை என்பது உங்களுடைய வாழ்வின் ஒரு பகுதி மட்டும்தான், அதுவே உங்கள் அடையாளம் இல்லை என்பதை நீங்கள் உலகுக்கு உணர்த்த வேண்டும்.உங்களின் திறன்கள், நல்ல குணங்கள், அணுகுமுறை போன்றவற்றை மேம்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய நிறைகளைப் பார்க்காமல், குறைகளைப் பார்ப்பது அவர்களது குறையாகும். இதில் நீங்கள் வருத்தப்பட வேண்டியது எதுவும் இல்லை.தடைகளைத் தாண்டி முன்னேறுங்கள்.


{ 6 }


வாசுகியின் கேள்வி :- என் மகள் MBA படித்திருக்கிறாள்.தினமும் வீட்டில் சண்டை போடுகிறாள்.வேலைக்குப் போகவில்லை. மனநல மருத்துவர் இடம் கூட்டிச்சென்று ஆலோசித்தேன். வெளியில் செல்லவும், வெளியாட்களிடம் பேசவும் பயப்படுகிறாள்.

சமீபத்தில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாள். அவளுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பாக உங்கள் ஆலோசனையை வேண்டுகிறேன்.


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


இந்த நிலையில் உங்கள் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பது நல்ல முடிவாகத் தெரியவில்லை.திருமண வாழ்வை வெற்றிகரமாக் கொண்டு செல்லும் மனநிலையில் அவர் இல்லை என்பது தெரிகிறது.உடல் மற்றும் மன அளவில் அவர் தயாராக இல்லாதபோது, அவரைத் திருமண வாழ்வில் ஈடுபடுத்துவது உங்களுக்கும் மன அழுத்தத்தை அதிகரிக்க செய்யும்.அவர் தற்போது திருமண வாழ்க்கைக்கு தகுதியாக இருக்கிறாரா ? என்பதை அவருக்குச் சிகிச்சையளிக்கும் மனநல மருத்துவர் இடம் ஆலோசியுங்கள்.தனி ஒருவராகசமுதாயத்தை எதிர்கொள்வதற்கு அவர் மனதளவில் தயாராக வேண்டும். அதற்கான சிகிச்சைகளை அவருக்கு அளியுங்கள்.


{ 7 }


வாசுகியின் கேள்வி : - எனக்கு 63 வயது, எனது கணவருக்கு 67 வயது. எங்களுக்கு மூன்று மகள்கள்.மூத்த மகளுக்கு 40 வயது. அவளுக்கு இளம் வயதில் மகனும் மகளும் உள்ளனர்.ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் விற்பனை பிரதிநிதியாக இருக்கிறார். எங்கள் இரண்டாவது மகள் திருமணமாகி கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கின்றனர். மூன்றாவது மகளுக்கு 32 வயதாகிறது. இன்னும் திருமணம் ஆகவில்லை.அவளும் ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். தனது மூத்த சகோதரியின் கணவரை மட்டுமே திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள்.பல வருடங்களாக அவர் இவளை மூளைச்சலவை செய்து வருகிறார்.இதன் காரணமாகக் குடும்பத்தில் அமைதி இல்லாமல் இருக்கிறோம்.நாங்கள் என்ன செய்ய வேண்டும்?


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


பல வருடங்களாக உங்கள் மூன்றாவது மகளை, முதல் மகளின் கணவர் மூளைச்சலவை செய்வதாகக் குறிப்பிட்டுஉள்ளீர்கள்.அதை ஆரம்ப நிலையிலேயே நீங்கள் தடுக்காதது ஏன் என்று தெரியவில்லை.மேலும் உங்கள் கடிதத்திலிருந்து, உங்கள் 3வது மகளுக்கும் முதல் மகளின் கணவருக்குமான உறவு, அவளின் (Teen Age)

டீன் ஏஜ் வயதில் இருந்தே ஆரம்பித்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. அவ்வாறு இருக்கும்போது, அது உடல் சார்ந்த தொடர்பாக இருக்க வாய்ப்பிருக்கிறது. ஒருவேளைஅத்தகைய தொடர்பு இருந்தால், இத்தனை வருடங்களில் அவர்களின் உறவு மேலும் வலுப்பெற்று இருக்கும்.இதிலிருந்து உங்கள் மகளை வெளிக்கொண்டு வருவதற்கு மனநல மருத்துவரின் உதவி நிச்சயம் தேவைப்படும். மேலும் உங்கள் முதல் மகளுக்கும், அவரது கணவருக்குமான உறவு ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.அவர்களை தம்பதிகளாக மனநல

ஆலோசனை பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள். இதன் மூலம் இந்தப் பிரச்சினையைச் சரி செய்ய முடியும்.


{ 8 }


வாசகியின் கேள்வி : - நாளிதழ்களில் பாலியல் வன்முறை, படுகொலை போன்ற செய்திகளைப் படித்தால், ஏதோ எனக்கே நடந்தது போல டென்ஷனாகி (Tension) சிலர் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்று கோபம் அதிகமாகிறது.அக்கம் பக்கத்தினர் தவறு செய்யும்போதும், டென்ஷனாகி கோபமாகக் கண்டிப்பதன் மூலம் விரோதம் வளர்கிறது.என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?


மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


நாகரீக சமூகத்தில் வாழ்பவர்களுக்கு இத்தகைய கொடூர சம்பவங்கள் சகித்துக் கொள்ள முடியாதது தான்.இருந்தாலும் இவற்றை உணர்ச்சிப் பூர்வமாகக் கையாள்வது சரியல்ல என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.இவற்றால் நீங்கள் மனதளவில் பாதிக்கப்பட்டால், இவற்றைத் தடுப்பதற்கு உங்களால் முடிந்த நேர்மையான பங்களிப்பாக என்ன செய்ய முடியும் என்று யோசியுங்கள்.

உதாரணத்திற்கு, உங்கள் மகனுக்குப் பெண்களை மதிக்கவும், அவர்களை நல்ல முறையில் நடத்தவும் கற்றுக் கொடுங்கள். சமூகத்தில் நிகழ் வேண்டும் என நாம் நினைக்கும் ஒவ்வொரு மாற்றமும், குடும்பத்திலிருந்து தான் ஆரம்பிக்க வேண்டும்.


இந்தப் பதிவைப் படிக்கும் “ வாசகர் - வாசகிகள்“ அனைவரும் இந்தப் பதிவின் கீழ் இருக்கும்“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.வேண்டுகோள் இது.


“ இப்படிக்கு தேவதை” தொடக்கம் அறிய இங்கே சுட்டவும்


இப்படிக்கு தேவதை” பாகம் இரண்டை படிக்க இங்கே சுட்டவும்


நன்றி :- தினத்தந்தி


இப்படிக்கு தேவதை முதலாம் பாகம்


#தினத்தந்தி #தேவதை #இலவசஇணைப்பு #கேள்விபதில் #உளவியல் #உலவியல்நிபுனர் #மருத்துவர் #சந்கீதமகேஷ் #வாசகிகள் #வழிகாட்டி


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad