Type Here to Get Search Results !

இப்படிக்கு தேவதை இரண்டாம் பாகம்

 இப்படிக்கு தேவதை  இரண்டாம் பாகம்

இப்படிக்கு தேவதை  இரண்டாம் பாகம்


வாழ்க்கையில் தங்களின் துயரங்களையும், மனதை வாட்டி வதக்கும் நெருக்கடிகளைக் களைந்துயெரியவும், பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் பெண்மணிகளுக்குத் தினத்தந்தி நாளிதழ் வழங்கும் இலவச இணைப்பாக ஞாயிறு தோறும் வெளிவரும் “தேவதை” புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

வாசகிகள் கேட்கும் கேள்விகளுக்கு மிக மிக அருமையான பதில்களை “மருத்துவர்.சங்கீதா மகேஷ்”. உளவியல் நிபுணர் அவர்கள்“ இப்படிக்கு தேவதை” தலைப்பில் பதில் அளிக்கிறார்.

இரண்டாம் பாகம் படிக்கும் முன்பாக இந்த“ தேவதை”புத்தகத்தின் தொடக்கத்தையும், “கேள்வி - பதில்முதல் பாகத்தையும் படித்துக் கொள்ளுங்கள். தொடக்கம் மற்றும் முதல் பாகம் 


வாசகியின் கேள்வி 1 :- எனக்கு அடிக்கடி கோபமும், அழுகையும் வருகிறது. எதன்மீதும் ஆர்வம் இல்லாத மனநிலையில் இருக்கிறேன். எனது குடும்பத்தினர் என்னைச் சார்ந்து இருப்பதால், அவர்களிடம் என்னால் இதைத் தெரிவிக்க முடியவில்லை. நான் இதிலிருந்து மீள்வதற்கு வழி கூறுங்கள்?


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சினையைத் தான் நீங்களும் சந்தித்து இருக்கிறீர்கள். தொடர்ந்து குடும்பத்தினரை கவனிப்பதிலேயே ஈடுபட்டு இருப்பதால், உங்களைக் கவனிக்க மறந்ததன் விளைவே இது. இதை உங்களுக்குள்ளேயே வைத்து இருந்தால் தீவிரமான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் உட்கார வைத்து, உங்கள் நிலையைப் பற்றிப் பொறுமையாகக் கூறுங்கள். அவர்களுக்குப் புரிய வையுங்கள்.


வீட்டு வேலைகள் மற்றும் இதர வேலைகளை அவர்களுக்கும் பிரித்துக் கொடுங்கள். இதன் மூலம் உங்களுக்கான நேரம் கிடைக்கும். அந்த நேரத்தில் உங்கள் மனதுக்குப் பிடித்த செயல்களில் ஈடுபடுங்கள்.வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்காமல், மொட்டை மாடியில் சிறிது நேரம் நடக்கலாம். பரந்து விரிந்த வானத்தை ரசிக்கலாம். பிடித்த பாடல்கள் கேட்கலாம். இதன் மூலம் மனம் அமைதியாகும். நீங்கள் ஆரோக்கியமான மனநிலையில் இருந்தால், குடும்பத்தின் மகிழ்ச்சி மேலும் அதிகரிக்கும்.


வாசகியின் கேள்வி 2 :- அனைவருமே பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தக் காலகட்டத்தில், நான் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதன் மூலம் எனது குடும்பத்துக்கு உதவ விரும்புகிறேன். ஆனால் என் கணவர் வேண்டாம் என்கிறார். இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்யலாம்?


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


தற்போதைய காலத்தில் கணவன் மனைவி இருவருமே சம்பாதிப்பது, பொருளாதார ரீதியில் நிறைவாக வாழ்வதற்கு உதவும். முதலில் உங்கள் கணவர் உங்களை வேலைக்குச் செல்ல வேண்டாமெனக் கூறுவதற்கான காரணம் என்ன வென்று கண்டறியுங்கள். ஒருவேளை நீங்கள் வேலைக்குச் செல்வதால் வீட்டைக் கவனிப்பதற்கு முடியாமல் போய்விடும் என்று நினைக்கிறாரா?

வீட்டு வேலைகள் செய்வதில் அவரது உதவியை நீங்கள் எதிர்பார்க்கக்கூடும் என்று யோசிக்கிறாரா? அல்லது உங்கள் வருமானம் பொருளாதார ரீதியாகப் போதாது எனத் தயங்குகிறாரா? என அறிந்து கொள்ளுங்கள். பின்பு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற உங்கள் முடிவு, எந்தவிதத்திலும் அவரைப் பாதிக்காது என்று அவருக்கு உறுதி அளியுங்கள். அவருக்குப் பொறுமையாகப் புரிய வையுங்கள். இதன் மூலம் அவருடைய முடிவு மாறும்.மேலும், தற்போது பெண்கள் வேலைக்காக வெளியே செல்லாமல் வீட்டிலிருந்து சம்பாதிக்கும் வகையில் பல வாய்ப்புகள் உள்ளன. அவற்றையும் கருத்தில் கொண்டு யோசியுங்கள். நல்ல தீர்வு கிடைக்கும்.


வாசகியின் கேள்வி 3 :- நான் கிராமத்தில் வசித்து வருகிறேன். எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்கிறார். காதலித்து திருமணம் செய்து கொண்டேன். கணவர் மற்றும் மாமியார் உடன் வசிக்கிறேன். தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். மாமியார் என்னை மனதார ஏற்றுக் கொள்ளவில்லை. சில நேரங்களில் கடினமான வார்த்தைகளால் திட்டுகிறார். எனது அம்மாவைப் பார்க்கவோ, பேசவோ அனுமதிப்பதில்லை. இதனால் மிகுந்த மன வருத்தத்தோடு இருக்கிறேன். எனது கணவர் என்னை அக்கறையோடு கவனித்துக் கொள்கிறார். அவரது தொழிலுக்கு எனது மாமியார் உதவி இருப்பதால், அவரை இவரால் எதிர்த்துக் கேள்வி கேட்க முடியவில்லை. திருமணத்துக்குப் பின்பு தையல் மற்றும் அழகுக்கலை பயிற்சி முடித்து, சொந்தமாகத் தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை. சில நேரங்களில் எனது தாய் வீட்டுக்கே சென்று விடலாம் என்று தோன்றுகிறது. எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்?


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


நீங்கள் கர்ப்பமாக இருப்பதாகக் கூறி இருக்கிறீர்கள். இந்த நேரத்தில் உடல் மற்றும் மனதளவில் ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையானது. உங்களுக்கு இருக்கும் மற்ற பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கக்கூடியவைதான். எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள். ஒவ்வொன்றாகத் தீர்வு காணுங்கள். மாமியாருடன் மோதலில் ஈடுபடுவது, உங்கள் மன அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும். எனவே அதைத் தவிர்த்து, உங்கள் குழந்தையை எவ்வாறு நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துங்கள்.உங்கள் கணவர் உங்களுக்குத் துணையாக இருக்கிறார்.பிரசவ நேரத்தில் அவரது அன்பும், அரவணைப்பும் உங்களுக்குக் கிடைக்கும். எனவே அவருடன் சேர்ந்து மகிழ்ச்சியோடு உங்கள் குழந்தையை வரவேற்க தயாராகுங்கள். சுய தொழில் செய்ய வேண்டும் என்ற உங்கள் கனவை வருங்காலத்தில் நனவாக்க முடியும்.


வாசுகியின் கேள்வி 4 :- எனக்கு 75 வயது. 52 வருட இனிமையான திருமண வாழ்க்கையில், கொரோனா புயல் வீசி எனது கணவரைக் கொண்டு சென்று விட்டது.எட்டு மாத காலமாகக் கண்ணீரோடு எனது பொழுது போகிறது. அவரது இழப்பை என்னால் தாங்க முடியவில்லை. கொந்தளிக்கும் எனது மனதை அமைதிப்படுத்த வழி கூறுங்கள் சகோதரி.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


52 வருடங்கள் கணவரோடு உடலும் உயிருமாகச் சேர்ந்து வாழ்ந்த உங்களுக்கு, தற்போதைய தனிமை நிறைந்த வாழ்க்கை மிகவும் துன்பம் தரக்கூடும். அவருடன் வாழ்ந்த அந்த இனிய நினைவுகளை எண்ணிப் பார்ப்பது உங்கள் மனதை அமைதி ஆக்கும். கணவர் உங்களுடன் இல்லாத வாழ்வின் எதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பிக்கும் முன்பு, கோபம், மனச்சோர்வு போன்ற உணர்வுகளை நீங்கள் அனுபவிக்க நேரிடலாம். உங்கள் கணவரது இழப்பு ஏற்படுத்திய வலியை ஏற்றுக்கொள்ளுங்கள். அவரது தெய்வீக இருப்பை உணர தொடங்குங்கள். கோவிலுக்குச் செல்வது போன்ற மனதுக்கு அமைதி தரும் செயல்களில் ஈடுபடுங்கள். உங்கள் கணவர் செய்ய விரும்பிய நேர்மறை செயல்களை நீங்கள் செய்ய முடியுமா என முயற்சி செய்யுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பதையே உங்கள் கணவர் விரும்புவார் என்பதை மனதில் கொண்டு செயல்படுங்கள்.


வாசகியின் கேள்வி 5 :- எனக்கு ஆறு வயதில் மகனும் இரண்டு வயதில் மகளும் உள்ளனர். குழந்தைகள்மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறேன். அவர்கள் அறியாமல் செய்யும் சிறு தவறுகளைக் கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மிகவும் கோபப் படுகிறேன். என்னை அறியாமல் கடினமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் மனதை மாற்றிக் கொள்வதற்கு ஆலோசனை கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


நீங்கள் உங்கள் பிள்ளைகள்மீது அதிக பாசம் வைத்திருப்பதால், அவர்களிடம் அளவுக்கு அதிகமான எதிர்ப்பார்ப்புகளைக் கொண்டிருப்பீர்கள். சிறு குழந்தைகள் தவறுகள் செய்வது சகஜமானதுதான். சிறு சிறு தவறுகளைச் செய்வது அவர்கள் இயல்பாக வளர்ந்து வருகிறார்கள் என்பதைக் குறிக்கும். தவறுகளிலிருந்து கற்றுக் கொள்வதன் மூலம், அவர்கள் குணநலன்களுடன் கூடிய பெரியவர்களாக வளர முடியும்.


வாசுகியின் கேள்வி 6 :- எனக்கு ஐம்பத்தி மூன்று வயது. என் கணவர் இறந்து பதினைந்து ஆண்டுகள் ஆகின்றன.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது ஒரே மகனுக்கு நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தேன். எனது மருமகள் திருமணமான புதிதில் மிக நல்ல முறையில் என்னிடம் நடந்து கொண்டாள். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவள் நடந்து கொள்ளும் முறையில் மாற்றம் தெரிகிறது. எனது மகனிடம் என்னை நல்ல முறையில் கவனித்துக் கொள்வது போலவும், அவன் இல்லாதபோது வார்த்தைகளாலும், செய்கைகளாலும் என் மனதை காயப்படுத்தும்படியாகவும் நடந்து கொள்கிறாள்.என் மகன் இதுவரை என்னிடம் நல்ல முறையில்தான் நடந்து வருகின்றான். எனது மருமகளின் மனதை மாற்றுவதற்கான ஆலோசனை வழங்குங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


எந்த உறவிலும் ஒரு நபரால் மட்டுமே விரிசல் ஏற்படாது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகன் உங்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்கிறார் என்று நீங்கள் கூறியதில் இருந்தே, உங்கள் மருமகள் அவரை உங்களுக்கு எதிராக மாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை என்பது தெளிவாகிறது.


உங்கள் மருமகள் வேறொரு சூழ்நிலையில் வளர்ந்தவர். புகுந்த வீட்டின் புதிய சூழல், உறவுகள், நடத்தை முறைகள் ஆகியவற்றுடன் பழகி வருகிறார். இந்த மாற்றத்தில் அவருக்கு வேண்டிய ஆதரவை வழங்குங்கள். வெளிப்படையாகப் பேசிப் பழகுங்கள். உங்கள் உறவின் அடிப்படையில் அவருக்குக் கடினமாக இருப்பவற்றை எளிதாக்குவதற்கு உதவுங்கள். தனிப்பட்ட வேறுபாடுகளை ஒப்புக்கொள்ளவது நெருங்கிய உறவுகளில் இணக்கமாக மாறுவதற்கு மிகவும் முக்கியமானது.


உங்கள் மருமகளின் செயல்பாடுகள் நீங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருக்கும்போது, அவரை உட்கார வைத்துப் பொறுமையாகப் பேசுங்கள். நல்ல நண்பரைப் போல அவரது சிரமங்களைப் போக்குவதற்கு ஆதரவு வழங்குங்கள். மாறாக ஆதிக்கம் செலுத்தவும், கட்டுப்படுத்தவும் முயற்சிப்பது உறவில் விரிசலை அதிகப்படுத்தும். அவளுக்கு உங்கள் அன்பை அதிகமாகக் கொடுங்கள். அவளிடம் நல்ல மாற்றங்களைக் காணும்போது பாராட்டுங்கள். அவளும் உங்களைக் கொண்டாடத் தொடங்குவாள்.


வாசகியின் கேள்வி 7 :- எனக்குப் பதற்ற நோய் இருக்கிறது.கல்லூரி படிப்பை முடித்து 2 ஆண்டுகள் ஆன பிறகும், சரியான வேலை கிடைக்காமல் சிரமப்படுகிறேன்.

மேற்படிப்பு படிக்க முயன்றாலும் அதில் கவனம் செலுத்துவது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளேன். நான் இதிலிருந்து மீள்வதற்குகான வழி கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


உங்களுக்குப் பதற்ற நோய் இருப்பதை மருத்துவ ரீதியாகக் கண்டறிந்தீர்களா? இதற்காக, மனநல மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை உட்கொண்டு வருகிறீர்களா?


உங்கள் பிரச்சினைக்கு, நீங்கள் முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில், எதன் மீதும் கவனம் செலுத்துவதில் சிரமம் உண்டாகும். இந்தக் கவலையால் படிக்கவோ, வேலை செய்யவோ முடியாத நிலை ஏற்படும். எனவே முதலில் தகுந்த சிகிச்சை மேற்கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். பிறகு நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று யோசித்து, அதில் முழுமையாக ஈடுபடுங்கள்.


வாசகியின் கேள்வி 8 :- எனக்கு நாற்பத்தி மூன்று வயது ஆகிறது. இதுவரைக்கும் சரியான படிப்போ, வேலையோ இல்லாமல் இருக்கிறேன்.எனது பெற்றோர் எனக்கு எல்லா விதங்களிலும் வழிகாட்டி வருகின்றனர். ஆனால் அவற்றை என்னால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அவர்களுக்குப் பாரமாக இருப்பதாக உணர்கிறேன். அவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தமால் வாழ்வதற்கு எனக்கு வழி காட்டுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


முதலில் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மனநல நிபுணரின் உதவியை நாடுங்கள். உங்கள் வலிகளிலிருந்து உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் விடுபடுங்கள். 


நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் நல்ல வேலையில் சேர்ந்து மற்றவர்களைவிட அதிகமாகச் சம்பாதிக்கலாம்.உங்கள் குடும்பம் உங்களை ஒரு பொருளாதாரச் சுமையாகப் பார்க்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் கஷ்டப்படுவதைப் பார்ப்பது அவர்களுக்குப் பெரிய சுமை.எனவே அவர்களின் துன்பத்தைப் போக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.சிந்தித்து செயல்படுங்கள்.


நன்றி “தினத்தந்தி


இந்தக் கட்டுரையின் தொடக்கத்தைப் படிக்க இங்கே சுட்டவும்


இப்படிக்கு தேவதை முதலாம் பாகம் படிக்க இங்கே சுட்டவும் 


பதிவை வாசித்த அனைவரும் மறவாமல்


பின்னூட்டம் (கருத்து - Comment)  எழுதவும் நன்றி.


#தினத்தந்தி #தேவதை #தினத்தந்திநாளிதழ் #கேள்விபதில் #இலவசஇணைப்பு #புத்தகம் #வழிகாட்டி #உளவியல் #உலவியல்நிபுனர் #மருத்துவர் #சங்கீதாமகேஷ்


இப்படிக்கு தேவதை இரண்டாம் பாகம்



கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad