Type Here to Get Search Results !

இப்படிக்கு தேவதை மூன்றாம் பாகம்

 இப்படிக்கு தேவதை மூன்றாம் பாகம்

இப்படிக்கு தேவதை மூன்றாம் பாகம்



தினத்தந்தி” நாளிதழ் ஞாயிறு தோறும் வழங்கிய இலவச இணைப்பாண“ தேவதை” என்ற புத்தகத்தில் வெளியான இப்படிக்கு தேவதை” என்ற தலைப்பில்

தினத்தந்திவாசகிகள் கேட்ட கேள்விகளுக்கு தீர்வு காணும் பதில்களை வழங்கியவர் மருத்துவர்.சங்கீதாமகேஷ். உளவியல் நிபுணர்


தினத்தந்தி வழங்கிய தேவதை புத்தகத்தைப் படிக்காதவர்கள்

சக்தி அச்சமில்லை“ இந்த வலைப்பதிவில் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.


இக்கட்டுரை “தொடக்கம்” - த்தை படித்துவிட்டு வாருங்கள்.

இதன் முழுமையான விளக்கம் கிடைக்கும். அதன் பிறகு

கேள்வி - பதில்“ முதலாம் பாகம் மற்றும் இரண்டாம் பாகம்

படித்துவிட்டு மூன்றாம் பாகம் படிக்கலாம்.


வாசகர் - வாசகிகள் படித்து முடித்ததும் உங்களின் பொன்னான கருத்துக்களை மறக்காமல் பின்னூட்டம் (comment)  எழுதவும்.


இப்படிக்கு தேவதை மூன்றாம் பாகம்


வாசகியின் கேள்வி 1 :- நான் கல்லூரியில் படிக்கிறேன்.

சற்று கருப்பாக இருப்பேன். எனது நிறம்குறித்து எனக்குத் தாழ்வு மனப்பான்மை உண்டு. சிலர் எனக்கு முன்னால் என் நிறம்குறித்து கேலி பேசுகின்றனர். அந்த நேரங்களில் மிகுந்த வருத்தத்துக்கு உள்ளாகிறேன். என் நிறத்தை மாற்றுவதற்காகப் பலவிதமான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகிறேன். நல்ல நிறமுள்ள பெண்களைப் பார்க்கும்போது, எனது நிறத்தை நினைத்துக் கவலை கொள்கிறேன். அவர்களுடன் சாதாரணமாக என்னால் பழக முடியவில்லை. என் மனநிலையை மாற்றிக் கொள்வதற்கு வழி கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


உடலின் மற்ற உறுப்புகளைப் போலத்தான் சருமமும், அதன் நிறமும். அதை உங்களுக்கான அடையாளமாகக் கருதாதீர்கள். அழகு, நிறம் போன்றவற்றால் பெறப்படும் ஈர்ப்பு நிலையானது அல்ல. ஒருவரின் ஆளுமை, உயரம், எடை, நிறம் போன்றவற்றைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதில்லை: அவரது அணுகுமுறை, ஒழுக்கம், குறிக்கோள், விடாமுயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றால் தீர்மானிக்கப்படுகிறது.


நிறத்தைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். உங்களை உடல் அளவிலும், மனதளவிலும் வலிமை

ஆக்கிக் கொள்ளுங்கள்.படிப்பில் முழு மனதோடு ஈடுபடுங்கள். நிறத்தை மையப்படுத்தி உங்களைக் கேலி செய்பவர்களுக்கு, உங்கள் வெற்றியின் மூலம் நீங்கள் யாரென்று நிருபித்துக் காட்டுங்கள்.


நிறத்தை மாற்றுவதற்கான அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். உங்களுக்குப் பொருத்தமான உடைகளை அணியுங்கள்.உங்களை நீங்களே ரசியுங்கள்.தன்னை நேசிப்பவரால் மட்டுமே, தன்னம்பிக்கையோடு செயல்பட முடியும். மற்றவர்களை

புன்னகையோடு அணுகுங்கள். உங்கள் நடத்தையின் மூலம் நீங்கள் நேசிக்கப்படுவீர்கள்.


வாசுகியின் கேள்வி 2 :- எனக்குத் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிறது. எனது பெற்றோர் என் சிறு வயதில் இருந்தே பொறுப்பற்று இருந்தனர். நான், அவர்களைப் போல இருக்கக் கூடாது என்ற உறுதியோடு படித்து நல்ல வேலையில் சேர்ந்தேன். கல்லூரித் தோழரான எனது கணவரைக் காதலித்து திருமணம் செய்தேன்.


ஆரம்பத்தில் எங்கள் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர், நாளடைவில் எங்களுடன் பேச ஆரம்பித்தனர்.

அவர்களுக்குத் தேவையானவற்றை நாங்கள் செய்தாலும், அவர்களின் பொறுப்பற்றத் தன்மையால் தொடர்ந்து அவசியமற்ற செலவுகள் செய்கின்றனர். அதற்குத் தேவையான பணத்தைக் கேட்டு நச்சரிக்கின்றனர்.


என் கணவர் வீட்டில் இருக்கும்போது அவருடன் நன்றாகப் பழகும் அவர்கள், அவர் வெளியில் சென்றவுடன் அவரைப் பற்றி அவதூறு பேசுகின்றனர். இவற்றையெல்லாம் என்னால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. அவர்களைக் கண்டிக்கவும் முடியவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


முதுமைக் காலத்தில் பெற்றோரைக் கவனிப்பதில் ஆண் - பெண் பாகுபாடு கிடையாது. உங்கள் பெற்றோர்க்குத் தேவையானவற்றை நீங்கள் செய்வது பாராட்ட வேண்டிய விஷயம். அதே சமயம் பொறுப்பற்றத் தன்மையோடு இருக்கும் உங்கள் பெற்றோரைத் திருத்தி, பொறுப்புள்ளவர்கள் ஆக்குவது கடினம். எனவே நீங்கள் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுப்பதே நல்லது. அவர்களை மாற்ற முயற்சிக்காதீர்கள். அவர்களுக்கான எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கு உண்மையில் என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். அவர்களது ஆடம்பரச் செலவுகளுக்குப் பண உதவி செய்வதை நிறுத்துங்கள். உங்கள் கணவரைப் பற்றி அவதூறு பேசும்போது நிதானமாகவும், உறுதியாகவும் அதற்கு எதிர்ப்பைத் தெரிவியுங்கள்.


வாசகியின் கேள்வி 3 :- என் மகன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறான். எந்த நேரமும் கையில் மொபைல் போனுடன் தான் இருக்கிறான். அதைப் பற்றிக் கேட்டாலோ அல்லது அறிவுரை கூறினாலோ கோபப்படுகிறான்.

இதற்கு ஒரு தீர்வு கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


தற்போதைய காலத்தில் வகுப்புகள், பிற பரிவர்த்தனைகள், பணப் பரிமாற்றம், செய்திகளை அறிந்து கொள்வது, சமூக தொடர்புகள் என அனைத்தும் மொபைலில் நடப்பதால், அதில் செலவழிக்கும் நேரத்தின் அளவு அதிகரிக்கிறது.


இருப்பினும் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறுவது பலனளிக்காது. இந்த வயதில் அறிவுரைகளை ஏற்பதை விட, அவற்றைச் சவாலாக நினைப்பதே அதிகமாக இருக்கும். ஏனெனில் பகுத்தறிந்து பார்க்கும் மனநிலையை விட, உணர்ச்சிப் பூர்வமாகப் பார்க்கும் மனநிலை அதிகமாக வேலை செய்யும்.


அவரது கல்வி தேவைகளைத் தவிர, இதர வேலைகளுக்காக மொபைலில் அதிகமான நேரத்தைச் செலவிடுவது, அவருடைய அன்றாட செயல்பாட்டைப் பாதிக்கும். மது, புகை போல மொபைல் போன் பயன்பாடும் ஒருவிதமான போதையாகவே பார்க்கப்படுகிறது.


அவரை இதிலிருந்து மீட்பதற்கு குடும்பத்தினர் அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து பொதுவான உரையாடல்களில் அதிக நேரம் செலவிடுங்கள். பிள்ளைகளோடு போதுமான குடும்ப நேரத்தைச் செலவிடுவது முக்கியமானது.


இந்த நேரங்களில் உங்கள் மகனுக்குப் பிடித்த விஷயங்களைப் பற்றி அதிகம் பேசுங்கள். தனிமையை தவிர்த்து அவரைக் குடும்பத்தோடு ஒன்ற வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.


அவரது மொபைல் பயன்பாட்டை மிகவும் கவலைக்குரிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இயல்பாக அவரை

அணுகுங்கள்.


வாசுகியின் கேள்வி 4 :- நான் கூட்டுக் குடும்பத்தில் பிறந்தவள். என் உடன் பிறந்த சகோதர - சகோதரிகள் அனைவரும் திருமணம் செய்து கொண்டு, அவரவர் குடும்பத்தோடு இருக்கிறார்கள். எனது மூத்த சகோதரியின் திருமண வாழ்க்கை நல்ல முறையில் இல்லாததால், குழந்தையோடு மீண்டும் தாய் வீட்டுக்கே வந்துவிட்டாள்.


இந்த நிலையில் எனக்குத் திருமணம் நடந்தது. கணவரின் நடத்தை சரியில்லாததால், திருமணம் நடந்த சில மாதங்களிலேயே அவரை விட்டுப் பிரிந்தேன். இப்போது நான் மீண்டும் திருமணம் எனும் பந்தத்திற்குள் நுழையலாமா அல்லது வாழ்க்கையை இப்படியே கடந்து விடலாமா? எனக்கு நல் வழி காட்டுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


நீங்கள் கடந்து வந்த தோல்வியுற்ற திருமண அனுபவத்தைக் கருத்தில் கொண்டும், உங்கள் சகோதரிக்கு நேர்ந்ததைப் பார்க்கும்போதும், திருமணம் என்ற அமைப்புக்குள் நுழைவதற்கு உங்களுக்குக் கவலையும், பயமும் ஏற்படுவது இயற்கையானது.


அதே சமயம் உங்களது மற்ற உடன்பிறப்புகள் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லோரது திருமண வாழ்க்கையிலும் பிரச்சினைகள் என்பவை வரக்கூடியவையே.


திருமணம் செய்து கொள்வதாக? வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் முன், உங்களின் எதிர்கால உறவில் சிறந்த பங்களிப்பை வழங்க நீங்கள் எந்த விதத்திலாவது மாற வேண்டுமா? என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள். 


உங்களில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தால், இன்னொரு நபரை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்கள் என்று அர்த்தமாகும். மேலும் திருமண வாழ்க்கையில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒருவரை நீங்கள் கண்டு பிடிக்க முடிந்தால், ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது? சிந்தித்து செயல்படுங்கள். வாழ்த்துக்கள்.


வாசகியின் கேள்வி 5 :- செல்லப் பிராணிகள் வளர்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், என்றாவது ஒரு நாள் அவை என்னை விட்டுப் போய்விடும் என்ற பயம் இருக்கிறது. அதனால் வளர்க்க முடியவில்லை. எனது பயத்தை எப்படி போக்குவது? வழிகாட்டவும்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


உங்களுக்கு இழப்புகுறித்து அதிக அளவு பயம் இருப்பது புரிகிறது. உங்கள் குடும்பத்தில் அல்லது நெருங்கிய உறவுகளில் யாரையாவது நீங்கள் இழந்திருக்கலாம் அல்லது அவர்களோடு தொடர்பு கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அந்த இழப்பைத் தாங்கிக்கொள்வதற்கு நீங்கள் மிகுந்த சிரமப்பட்டு இருக்கலாம். அவ்வாறு அனுபவித்த வலியின் காரணமாக, மற்றொரு இழப்பைச் சந்திக்க நீங்கள் தயாராக இல்லை.


எந்த உறவிலும் இழப்பு என்பது இயல்பானது. இந்தப் பயத்தை வெல்வதற்கான ஒரே வழி, நம் வாழ்வில் குறிப்பிடத்தக்கவற்றை இழக்க ஏற்றுக்கொள்வதும், தயார் செய்வதும் தான்.


எனவே, இழப்புபற்றிய நினைவுகளை ஒதுக்கி வையுங்கள். உங்களுக்குப் பிடித்த செல்லப்பிராணியை வளர்க்க ஆரம்பியுங்கள். அதன் மீது அன்பை பொழியுங்கள். அதனுடன் இனிமையான தருணங்களை அனுபவியுங்கள். பிற்காலத்தில் அது உங்களை விட்டுப் பிரிந்து விடலாம் என்ற எண்ணத்தை நீக்கி விடுங்கள். ஒருவேளை அவ்வாறு நடந்தால், செல்லப்பிராணியுடன் நீங்கள் மகிழ்ந்துயிருந்த தருணத்தின் இனிமையான நினைவுகள், உங்கள் காயங்களை ஆற்றும். செல்லப்பிராணிகள் வளர்ப்பது மூலம் அவற்றுக்கும், உங்களுக்கும் மகிழ்ச்சி உண்டாகும்.


வாசகியின் கேள்வி 6 :- இரவில் வாசல் கதவு பூட்டிய பின்னர், வீட்டில் உள்ள அனைவரும் தூங்கிவிட்டார்களா என்று பார்த்த பின்பே, எனக்குத் தூக்கம் வருகிறது. யாரேனும் ஒருவர் விழித்திருந்தாலும், அவர்கள் தூங்கும் வரை நானும் தூங்காமல் விழித்துக் கொண்டு இருக்கிறேன். இதன் காரணமாகக் குடும்பத்தினருடன் மனக்கசப்பு ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


இது உங்கள் அதிகப்படியான பாதுகாப்பு உணர்வாக இருக்கலாம். அல்லது நீங்கள் அனைவரையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நபராக இருக்கலாம். 


நீங்கள் எல்லாவற்றையும் சரியாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நபராக இருந்து, அதையே மற்றவர்களிடமும் எதிர்ப்பார்ப்பவராக இருக்கலாம். உங்களைப் போலவே, மற்றவரும் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உங்களுக்கு அதிகம் இருப்பதால், பொறுப்புகளை மற்றவரிடம் ஒப்படைப்பதில் உங்களுக்குத் தயக்கம் இருக்கலாம். 


வீட்டில் உள்ள அனைத்தும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஒரு கட்டத்திற்கு மேல் உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் முற்றிலும் சோர்வடைவீர்கள். மற்றவர்களைப் பற்றியே யோசித்துக்கொண்டு இருக்காமல், சுய அன்பை பழகுங்கள். வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு மகிழ்ச்சியான தருணங்களை அனுபவியுங்கள்.


வாசகியின் கேள்வி 7 :- எனது ஐந்தரை வயது ஆண் குழந்தையின் சேட்டை அதிகமாக உள்ளது. வீட்டிற்கு வரும் உறவினர்களைத் தொந்தரவு செய்கிறான். உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லவும் பயமாக இருக்கிறது. ஊரடங்கு காரணமாக இதுவரை பள்ளி செல்லவில்லை. 

இந்த வருடம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். என் ஒரே மகனின் இந்தச் சேட்டை இயல்பானது தானா? இல்லை இயல்புக்கு மீறியதா?


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


5 ½ வயதில் குழந்தைகள் அதிகப்படியான ஆற்றலோடு இருப்பார்கள். அதன் காரணமாக அவர்களின் செயல்களின் வேகம் அதிகமாகயிருக்கும். அதே நேரத்தில் உங்களால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், தவறு உங்கள் பக்கமும் இருக்கலாம். அதிகப்படியான செல்லம் கொடுத்து, அவனது எந்தச் செயலுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்காமல் இருப்பதன் காரணமாகக் கூட, அவனது சுட்டித் தனங்கள் அதிகமாகி இருக்கலாம்.


அவன் கேட்டதை எல்லாம் இல்லை என்று சொல்லாமல் வாங்கி கொடுப்பது, விரும்பிய செயல்களைத் தாமதிக்காமல் நிறைவேற்றுவது போன்றவற்றை செய்தீர்கள் என்றால், இனி அவ்வாறு நடப்பதை தவிர்க்கவும். அவனது செயல்பாடுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கவும். 


இவை அனைத்தும் சரி செய்யப்பட்டாலும் பிரச்சினை தொடர்ந்தால், குழந்தையை உளவியல் நிபுணர் இடம் மதிப்பீட்டுக்கு அழைத்துச் செல்வது சிறந்தது.


ஒருவேளை உங்கள் குழந்தை ஹைப்பர் ஆக்டிவாக இருந்தால், அதற்குரிய பயிற்சிகள் மற்றும் சிகிச்சைகள்மூலம் அவனது செயல்பாடுகளை நெறிப்படுத்த முடியும்.


வாசகியின் கேள்வி 8 :- நான் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறேன். 13 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எனக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். எனது மாமியார் எங்களுடன் வசிக்கிறார். திருமணம் நடந்தது முதல் இப்போது வரை, என்னை வார்த்தைகளாலும், செய்கைகளாலும் துன்புறுத்தி வருகிறார்.


எனது கணவர் அவரை எதிர்த்து ஏதாவது பேசினாலும், எனது மாமியார் தன்னைத்தானே ஏதாவது செய்து கொள்வேன் என்று பயமுறுத்தி, எனது கணவரின் வாயை அடைத்து விடுகிறார்.


ஒவ்வொரு நாளும் எனது கணவர் கணவர் மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் என்னை அவமானம் படுத்தும்போது, நான் மிகவும் தாழ்ந்து போவதாக உணர்கிறேன். இந்த நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


நீங்கள் சொல்வதிலிருந்து, உங்கள் மாமியார் வேண்டும் என்றே உங்களிடம் மோசமான நடத்தையில் ஈடுபடுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அவரது வார்த்தைகளால் நீங்கள் காயப்பட வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அதற்கு இடம் கொடுக்காதீர்கள்.


அவரது வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். சுய பச்சாதாபத்தை பின்பற்றாமல், உங்களுக்குள் இருக்கும் வலிமையை உணருங்கள்.

உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் யாரென்று உங்களுக்குத் தெரிந்ததால், அவர் உங்களைப் பற்றிச் சொல்லும் வார்த்தைகளை எண்ணி கவலை அடைய வேண்டியது இல்லை. உங்களைச் சக்தி வாய்ந்தவராக உணருங்கள்.

அது உங்கள் நடத்தையில் பிரதிபலிக்கும்.


வாழ்க்கை அழகானது, அதை மகிழ்ச்சியாக வாழ வேண்டும். நீங்கள் அவ்வாறு வாழ முடிவு செய்தால், யாருடைய செய்கையும் உங்களைப் பாதிக்க முடியாது.

மகிழ்ச்சியை தேர்ந்தெடுங்கள்.



நன்றி : தினத்தந்தி


இந்தக் கட்டுரையின் தொடக்கத்தைப் படிக்க இங்கே சுட்டவும்


கட்டுரையின் முழு விவரம் 


இப்படிக்கு தேவதை முதலாம் பாகம் படிக்க இங்கே சுட்டவும்


முதலாம் பாகம்


இப்படிக்கு தேவதை இரண்டாம் பாகம் படிக்க இங்கே சுட்டவும்


இரண்டாம் பாகம்


பதிவை வாசித்த அனைவரும் மறவாமல்


பின்னூட்டம் (கருத்து - Comment)  எழுதவும் நன்றி.


#தினத்தந்தி #தேவதை #இப்படிக்குதேவதை

#புத்தகம் #இலவசஇணைப்பு #வாசகிகள்

#கேள்விபதில்கள் #உளவியல்

#உலவியல்நிபுனர் #மருத்துவர்

#சங்கீதாமகேஷ் 


இப்படிக்கு தேவதை மூன்றாம் பாகம் தினத்தந்தி





கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad