இப்படிக்கு தேவதை நான்காம் பாகம்
இப்படிக்கு தேவதை நான்காம் பாகம்
“இப்படிக்கு தேவதை நான்காம் பாகம்” படிக்கும் முன் இதன் மூன்று பாகங்களையும், மற்றும் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தையும் நீங்கள் அறிந்து கொண்டால் வாசிக்கவும் வாசித்தவுடன் புரிதலும் ஏற்படும்.
அரவணைக்க யாரும் இல்லை, பெருந்துன்பம் வாழ்விலும் அடிக்கடி. நிகழ்கிறதேயென அச்சம் கலந்த உணர்விலே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், துயர் களைந்து நிம்மதியாய் வாழ மாட்டோமா எனத் திணறுபவர்களுக்கும் இந்தப் பதிவுகள் நிச்சயமாக உதவக்கூடும்.
இந்தப் பதிவை நான் இங்கே பதிவு செய்வதற்கு முக்கிய காரணம், தினத்தந்தியில் ஞாயிறு தோறும் இலவச இணைப்பாக வெளிவந்த தேவதை புத்தகத்தை வாசிக்கத் தவறியவர்களுக்குத்தான்.
முதலிலிருந்து வாசிக்கத் தொடங்குங்கள்.
இதன் தொடக்கத்தை வாசிக்க இங்கே சுட்டவும்
வாசகியின் கேள்வி 1 :- கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். ஆண் - பெண் இருபாலரும் சேர்ந்து படிக்கும் கல்லூரியில் படிக்கிறேன். பள்ளியில் படித்தபோதும், ஆண்களுடன் சேர்ந்து படித்த பழக்கத்தின் காரணமாக, கல்லூரியிலும் எல்லா ஆண்களிடமும் கலகலப்பாகப் பேசுவேன்.
இதை என் அப்பா தப்பாக நினைக்கிறார். நான் யாரிடமும் தவறான எண்ணத்தில் பேசுவதில்லை. இதை என்னுடைய அப்பா புரிந்துகொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
நீங்கள் மிகவும் வெளிப்படையாகப் பழகும் நபர் என்று தெரிகிறது. இருந்தாலும் உங்கள் நண்பர்கள் உங்களை எவ்வாறு நினைக்கின்றார்கள் என்பதில் கவனமாக இருங்கள். வெளிப்படையாகப் பேசும் உங்கள் பழக்கம், அவர்களுக்கு எவ்விதமான தவறுதலான எண்ணங்களையும் ஏற்படுத்தி விடக் கூடாது.
ஆண் நண்பர்களிடம் பழகுவதற்கான எல்லைகளை நிர்ணயுங்கள். உங்கள் நண்பர்களைப் பற்றி உங்களுக்கு மட்டுமே தெரியும். அவர்களைப் பற்றி உங்கள் தந்தைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே உங்கள் நண்பர்களை உங்கள் தந்தைக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்களோடு பழகுவதற்கு அவருக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள்.
வாசகியின் கேள்வி 2 :- எனது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வருடம் கொரோனா பரவல் ஏற்பட்டபோது, தனக்கு தொற்று ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இருந்த போதும் அவருக்கு லேசான நோய் தொற்று ஏற்பட்டது. எனவே அவரை வீட்டிலேயே தனிமைப்படுத்தினோம். ஆனால், அவர் அதிகமான பயத்தில் இருந்தார். மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்படுமோ என்று பதறினார். கொஞ்சம் கொஞ்சமாகத் தொற்றிலிருந்து குணமடைந்தார். ஆனாலும், அதைப் பற்றியே தொடர்ந்து யோசித்துக் கொண்டு இருந்தார்.
நரம்புச் சிகிச்சை நிபுணர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்றார். தனது எண்ணப்படியே ஆலோசனை பெற்றார். பின்பு இருதய நிபுணரைச் சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றார். இவ்வாறாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மருத்துவர்களைச் சந்திக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு இருந்தார். இதனால் அவரை மனநல நிபுணரிடம் அழைத்துச் சென்றோம். ஆனால் அவரது சிகிச்சைக்கு எனது மகன் ஒத்துழைக்கவில்லை. நாளுக்கு நாள் அவரது கோபம் அதிகமாகியது.
சமீபத்தில் கல்லூரிக்குச் சென்றபோது, அவரது வகுப்பு மாணவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டபோது எடுத்துக்கொண்ட மருந்துகளைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டு, தற்போது அந்த மருந்துகளைத் தானும் சாப்பிட வேண்டும் என்கிறார். எனது மகனின் இந்த நிலையை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
உங்கள் மகன் கடுமையான பதற்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார் என்பது தெரிகிறது. அவருக்கு மருந்துகளோடு, சரியான சிகிச்சையும் அவசியம் தேவை. இதுவரை மருந்துகள் மட்டுமே கொடுக்கப்பட்டு இருப்பதால், அவரைச் சிகிச்சைக்கு அழைத்துச் செல்வது முக்கியமானது. ஒருவேளை அவர் மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு வரவில்லை என்றால், உளவியல் ஆலோசகரிடம் முதலில் அழைத்துச் செல்லுங்கள். அவர் உங்கள் மகனைச் சிகிச்சைக்குச் செல்வதற்கான மனநிலைக்கு தயார் செய்வார்.
வாசகியின் கேள்வி 3 :- எனக்கு நிரந்தர வேலையோ, வருமானமோ, வங்கி சேமிப்போ இல்லை. வயதாகிவிட்டது. எதிர் காலத்தில் எப்படி வாழப் போகிறோம் என்கிற பயம் மனதை பாடாய்ப் படுத்துகிறது. இரவில் தூக்கம் வருவதில்லை. அடிக்கடி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றுகிறது. யாரிடமும் பேசப்பிடிக்கவில்லை. தனிமையில் இருக்கவே பிடிக்கிறது. எதற்கெடுத்தாலும் எரிச்சலும், ஆத்திரமும், கோபமும் வருகிறது. வாழ்க்கையில் எந்த நேரமும் பயம், படபடப்பு போன்ற உணர்வுகள் இருக்கிறது. இவற்றிலிருந்து மீள வழி காட்டுங்கள்.
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
நீங்கள் உங்கள் வயதைக் குறிப்பிடவில்லை. என்றாலும் நீங்கள் 50 முதல் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். நீங்கள் குறிப்பிட்டுள்ள பிரச்சினைகள் உடலியல் அல்லது உளவியல் காரணங்களால் இருக்கலாம். நீங்கள் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முந்தைய நிலையில் இருந்தாலோ அல்லது உங்களுக்குத் தைராய்டு பிரச்சினைகள் போன்ற ஹார்மோன்கள் தொடர்பான பாதிப்புகள் இருந்தாலோ, இது போன்ற மனநிலையை சந்திக்க நேரிடும். எனவே மருத்துவரைச் சந்தித்து இதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவும். சோதனைகளின் முடிவுகள் இயல்பானதாக இருந்தால் உங்கள் பிரச்சினை உளவியல் சார்ந்தது ஆகும்.
வாழ்வில் மகிழ்ச்சியையும், அமைதியையும் கொண்டு வர மற்றவர்கள்மீது கவனம் செலுத்துவது உதவாது.
நேர்மறை எண்ணங்கள், நேர்மறை உணர்வுகள்மூலம் உங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பார்க்கவும். வாழ்க்கையில் அமைதியைக் காண சிறியதாக இருந்தாலும், என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை யோசிக்கவும். உங்களிடம் உள்ள குறைந்த பட்ச நிதியைக் கொண்டு வாழ்க்கையை எவ்வாறு திட்டமிடலாம் அல்லது உங்கள் வருமானத்தை அதிகரிக்கக்கூடிய ஒரு பணியில் உங்களை எவ்வாறு ஈடுபடுத்தலாம் என்பதைப் பார்க்கவும். உங்களது தற்போதைய சூழ்நிலையிலிருந்து உங்களை எவ்வாறு மீட்பது என்று பாருங்கள்.
வாசகியின் கேள்வி 4 :- நான் 12 ம் வகுப்பு படிக்கும் மாணவி.சிறிய வகுப்புகளில் படிக்கும்பொழுது நன்றாகப் படிப்பேன். எனது வேலையைச் சிறப்பாகச் செய்து முடிப்பேன்.
தற்போது என்னால் அந்த அளவிற்கு படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. அடிக்கடி தூக்கம் வருகிறது. தலைவலி வருகிறது. எனக்குப் பிடித்தமான பாடங்களைப் படிப்பதற்கு கூடக் கடினமாக உள்ளது.அதனால் மதிப்பெண்களும் குறைய தொடங்கிவிட்டன. பொதுத் தேர்வுகள் நெருங்கிக் கொண்டிருப்பதால், தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறேன். எனது மனம் தெளியும் வகையில் வழிகாட்டுங்கள்.
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
பள்ளியின் கடைசி ஆண்டு என்பதால்,12 - ம் வகுப்பில் நீங்கள் காட்டும் செயல்திறன் மட்டுமே உங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்ற நம்பிக்கை, தற்போது அனைவரின் மனதிலும் வேரூன்றி விட்டது. இந்த நம்பிக்கை சிறு வயதில் இருந்தே நமக்குள் வலுவாகப் புகுத்தப்பட்டதால், நாம் கற்றுக் கொள்வதை ரசிக்காமல், அழுத்தத்தின் கீழ் கற்க ஆரம்பிக்கிறோம்.
இவ்வாறு உடலும் மனமும் அழுத்தத்தை உணரும்போது, அவை தூக்கம் அல்லது கவனத்தை சிதறடிப்பது அல்லது கவனம் செலுத்த முடியாமல் போவது போன்ற சில வழிகளில் அந்த அழுத்தத்தை வெளிப்படுத்துகின்றன.
போதிய இடைவெளிகளுடன் படிக்கும் நேரத்தைத் திட்டமிடுதல், சத்தான உணவு, சரியான தூக்கம், உடற்பயிற்சி செய்தல், நண்பர்கள் உறவினர்களுடன் பேசுதல் போன்ற செயல்களின் மூலம் மன அழுத்தத்திலிருந்து வெளிவர முடியும். தேர்வு மற்றும் அதன் முடிவுகளில் அதிகமாகக் கவனத்தை செலுத்தாமல், கற்றல் செயல் முறையை அனுபவிக்கவும்.
உங்களால் நன்றாகப் படித்து வெற்றிகரமாகத் தேர்வு எழுத முடியும் என்று நம்புங்கள். உங்களால் நிச்சயம் முடியும்.
வாசகியின் கேள்வி 5 :- நான் எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவள். என் பிள்ளைகளோ மற்றவர்களுக்கு உதவி செய்வதை நிறுத்துமாறு கூறுகின்றனர். எல்லோரும் உங்களை ஏமாற்றுகின்றனர். யாரும் நல்லவர்கள் இல்லை என்று சொல்கிறார்கள். நான் என் பிள்ளைகளின் பேச்சைக் கேட்பதா ? அல்லது என் மனம் சொல்லும்படி நடந்து கொள்வதா ? என்று தெரியாமல் குழம்புகிறேன். எனக்குத் தீர்வு சொல்லுங்கள்.
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
பிறருக்கு உதவும் உங்களின் நற்பண்புகள் பாராட்டத்தக்கவை. ஆனால், உங்கள் பிள்ளைகள் ஏன் உதவ வேண்டாம் என்று சொல்கிறார்கள் என்பதையும் யோசிக்க வேண்டும். உங்கள் உதவியை நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் மதிக்காத சம்பவங்கள் நடந்துள்ளதா ? உங்களது உதவி தேவையில்லாத போதும் பிறருக்கு உதவுகீறீர்களா? ஒருவருக்கு தேவை இருக்கும்போது மட்டுமே, நாம் உதவி செய்ய வேண்டும். நீங்கள் உதவி செய்யும் நபர்கள், உங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உதவுவதற்கான உங்கள் முயற்சியில், நீங்கள் அவர்களைச் சோம்பேறிகளாக ஆக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
எதிர்மறையாக நடப்பதை உங்கள் பிள்ளைகள் கவனித்து இருக்கலாம். அதனால் உங்களை அவர்கள் எச்சரித்து இருக்கலாம். நீங்கள் மற்றவர்களுக்கு அதிகமாக உதவுவதால், உங்கள் பிள்ளைகளுக்குத் தேவைப்படும்போது அவர்களுக்கு உதவி கிடைக்காமல் இருக்கலாம். உங்கள் பிள்ளைகளின் அறிவுரைகளைக் கருத்தில் கொண்டு, என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானியுங்கள். தேவையின்போது செய்யப்படும் உதவியே சிறந்தது என்பதை மனதில் கொள்ளுங்கள்.
தேவையற்ற இடங்களில் உதவி செய்து, உங்களை உடல் மற்றும் மன ரீதியில் அழுத்தத்துக்கு உள்ளாக்காதீர்கள்.
வாசகியின் கேள்வி 6 :- ஒரு ஆண் அதிக நம்பிக்கை கொடுத்துப் பிறகு விலகிச் சென்றதால், மற்ற ஆண்களிடம் பேசுவதற்கு கூட மனம் ஒத்துழைக்க மறுக்கிறது. யாரையும் நம்ப முடியவில்லை. என் எண்ணத்தை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
நீங்கள் ஆழ்ந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறீர்கள்.அந்த உறவு ஏற்படுத்திய உணர்ச்சிக் காயத்திலிருந்து நீங்கள் குணமடைய வில்லை. பகுத்தறிந்து பார்க்கும் நிலையில் இல்லாமல், உணர்ச்சிவசமான நிலையில் இருக்கிறீர்கள். முந்தைய உறவில், உண்மையில் என்ன தவறு நடந்தது என்பதை யோசிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள். உங்களை மாற்றிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள்.
இந்த மாற்றம், உங்களுக்குப் பொருத்தமான மற்றொரு உறவைத் தேர்ந்தெடுக்க உதவும். ஏனெனில், உறவில் உங்கள் தேவைகள் தெளிவாக இருக்கும்போது, வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் முடிவும் தெளிவாக இருக்கும். பகுத்தறிந்து பார்க்கும் நிலையும் சேர்ந்திருக்கும். ஆரோக்கியமான மன நிலையில் தான் உறவைப் பற்றிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
புதிய தொடக்கத்தை தேடுவதற்கு முன்பு, மனதை அமைதியான நிலைக்குக் கொண்டு வாருங்கள். உங்கள் மனதுக்கு பிடித்த வேலைகளில் ஈடுபடுங்கள்.திடமான மனநிலையில் இருக்கும்போது, உங்களுக்குத் தகுதியான துணையை சந்தித்தால், உங்கள் வாழ்க்கை பற்றிய முடிவை எடுங்கள்.
வாசகியின் கேள்வி 7 :- கல்லூரியில் படிக்கும்போது என்னுடைய நண்பருக்கும், எனக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஐந்து வருடங்களில் எங்களிடையே ஒற்றுமையும், நல்ல புரிதலும் ஏற்பட்டது. நாங்கள் இருவரும் தற்போது நல்ல வேலையில் இருக்கிறோம். என்னுடைய பெற்றோர் ஜாதி, ஜாதகம், சுற்றாரெனக் காரணங்களைச் சொல்லி எங்கள் காதலை ஏற்க மறுக்கிறார்கள். இதன் காரணமாக, என் குடும்பத்தில் எல்லோரும் மன அமைதி இழந்து நிற்கிறோம். நான் என் பெற்றோர்மீது அளவு கடந்த அன்பு வைத்துள்ளேன். இந்தச் சூழ்நிலைக்கு நான் தான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி என்னை வதைக்கிறது. எனக்கு வழி காட்டுங்கள்.
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
வாழ்க்கையில் பல நேரங்களில், இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்படும். அந்த இரண்டுமே சம அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, நமது முடிவெடுக்கும் சூழலைக் கடினமானதாக்கும். இருந்தாலும் பகுத்தறிவு மற்றும் உணர்ச்சி இணைந்த புத்திசாலித்தனத்தை, நீங்கள் பயன்படுத்த வேண்டிய நேரம் இது.
உங்கள் பெற்றோரின் முடிவை ஏற்றுக் கொள்வதற்கும், உங்கள் இதயத்தைப் பின்பற்றுவதற்கும் இடையில் உள்ள நன்மை தீமைகளைப் பகுப்பாய்வு செய்யுங்கள்.இரண்டில் எது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது? எது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.
உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும், அதில் நீங்கள் உறுதியாக நிற்க வேண்டும். மற்றவர்களின் ஆதரவை எதிர்பார்த்து எந்த முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும், உங்கள் முடிவின் விளைவுகளை எதிர்கொள்ளும் வலிமை உங்களுக்கு வேண்டும்.
வாசகியின் கேள்வி 8 :- எனது அண்ணன் 40 ஆண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். அவருடைய மனைவியும், இரண்டு மகன்களும் தமிழ்நாட்டில் வசிக்கின்றார்கள். அண்ணன் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து, இரண்டு மாதங்கள் தங்கிச் செல்வார். அப்போது அண்ணி மிகவும் நல்ல முறையில் நடந்து கொள்வார்.
ஒருநாள் அண்ணி இரண்டு மகன்களையும் தாய் வீட்டில் விட்டுவிட்டு, மற்றொரு ஆணுடன் சென்று விட்டதாகத் தெரிவித்தார்கள். எனது அண்ணன் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், அண்ணி அந்த ஆணை விட்டு வர மறுத்துவிட்டார். அந்த ஆண் ஏற்கனவே திருமணம் ஆனவர். இப்போது என் அண்ணனும், அவரது இரண்டு மகன்களும் தனியாகத் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் எனது அண்ணன் என்ன முடிவு எடுக்க வேண்டும்?
மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -
உங்கள் அண்ணன் மற்றும் அவரது மனைவிக்கு இடையேயான மண வாழ்க்கை, எந்த வகையில் இருந்தது என்ற உண்மை நமக்குத் தெரியாது. அவரது மனைவி செய்தது சரியா? தவறா? என்று யோசிப்பதற்கு பதில் உண்மை நிலையைப் புரிந்து நடந்துகொள்வதே நடைமுறைக்கு உதவும். சட்டபூர்வ திருமணத்தில் இருக்கும்போதே, அவர் தன் குழந்தைகளைக் கைவிட்டு, புதிய துணையுடன் வாழத் தொடங்கிவிட்டார். மீண்டும் உங்கள் அண்ணனுடன் சேர்ந்து வாழ அவர் விரும்பவில்லை. இந்தச் சூழ்நிலையைச் சட்டப்பூர்வமாகக் கையாள்வதே சரியான வழியாக இருக்கும். இதைக் கடந்து செல்லுவது குழந்தைகளுக்குக் கடினமானதாக இருந்தாலும், உங்கள் அண்ணன் பக்குவப்பட்ட தந்தையாக நடந்து கொள்ளும்போது, அவர்களுக்கு அது சற்றே எளிதாக இருக்கும்.
நன்றி : தினத்தந்தி
இந்தப் பதிவைப் படிக்கும்“ வாசகர் - வாசகிகள்“ அனைவரும் இந்தப் பதிவின் கீழ் இருக்கும்“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். வேண்டுகோள் இது.
இப்படிக்கு தேவதை தொடக்கம் அறிய இங்கே சுட்டவும்
இப்படிக்கு தேவதை பாகம் ஒன்றை படிக்க இங்க சுட்டவும்
இப்படிக்கு தேவதை பாகம் இரண்டை படிக்க இங்க சுட்டவும்
இப்படிக்கு தேவதை பாகம் மூன்றை படிக்க இங்க சுட்டவும்
இப்படிக்கு தேவதை மறக்க முடியாத வாசகிகளின் கேள்வியும் மருத்துவரின் அருமையான பதில்களும்.தினத்தந்தி ஞாயிறு நாளிதழில் இலவச இணைப்பாகத் தேவதை என்ற புத்தகம்.வாசகிகள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவர் பதில் சொல்லும் பக்கம்.
#தினத்தந்தி #வழிகாட்டி #இப்படிக்குதேவதை #தேவதை
#இலவசஇணைப்பு #கேள்விபதில் # வாசகிகள்
# உளவியல் #உளவியல்நிபுணர் #மருத்துவர் #சங்கீதாமகேஷ்
கருத்துரையிடுக
0 கருத்துகள்