Type Here to Get Search Results !

இப்படிக்கு தேவதை ஐந்தாம் பாகம்

இப்படிக்கு தேவதை ஐந்தாம் பாகம்


இப்படிக்கு தேவதை ஐந்தாம் பாகம் தினத்தந்தி
இப்படிக்கு தேவதை ஐந்தாம் பாகம்



இப்படிக்கு தேவதை ஐந்தாம் பாகம்


இப்படிக்கு தேவதை “ஐந்தாம் பாகம்” படிக்கும் முன் இதன் நான்கு பாகங்களையும், மற்றும் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தையும் நீங்கள் அறிந்து கொண்டால் வாசிக்கவும் வாசித்தவுடன் புரிதலும் ஏற்படும்.

குறிப்பாகத் தினத்தந்தி யின் ஞாயிறு நாளிதழ் இன் இலவச இணைப்பாக வந்த தேவதை புத்தகத்தில் இந்தத் தொடர் வெளியானது. முழுக்க முழுக்க பெண்களுக்கான புத்தகம் இது. இந்தத் தேவதை புத்தகத்தில் வெளியான ஒரு பகுதி 

“ இப்படிக்கு தேவதை” என்ற தலைப்பில் வாசகிகள் கேட்கும் கேள்விகளுக்கு உளவியல் நிபுணர் மற்றும் மருத்துவர் சங்கீதா மகேஷ் அவர்கள்.


அரவணைக்க யாரும் இல்லை, பெருந்துன்பம் வாழ்விலும் அடிக்கடி. நிகழ்கிறதேயென அச்சம் கலந்த உணர்விலே வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும், துயர் களைந்து நிம்மதியாய் வாழ மாட்டோமா எனத் திணறுபவர்களுக்கும் இந்தப் பதிவுகள் நிச்சயமாக உதவக்கூடும்.


வாசிக்கத் தவறியவர்களுக்கு மட்டுமே இந்தக் கேள்வி பதில் தொடர். இந்த வலைப்பதிவில் பதிவிடுகிறேன். வாசித்துப் பயன்பெறலாம்.தினத்தந்தி வாசகிகளால் பெரிதும் கவர்ந்த இப்பகுதி எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.


இந்தப் பதிவை நான் இங்கே பதிவு செய்வதற்கு முக்கிய காரணம், தினத்தந்தியில் ஞாயிறு தோறும் இலவச இணைப்பாக வெளிவந்த தேவதை புத்தகத்தை வாசிக்கத் தவறியவர்களுக்குத்தான்

முதலிலிருந்து வாசிக்கத் தொடங்குங்கள். இதன் தொடக்கத்தை வாசிக்க இங்கே சுட்டவும் 


வாசகியின் கேள்வி 1 :- எனது கணவர் தனியார் வங்கியில் உயர் அதிகாரியாகப் பணியாற்றுகிறார். எங்களுக்கு இரண்டு மகள்கள். இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள். வசதி வாய்ப்புக்குக் குறை இல்லாமல் வாழ்கிறோம். ஆனால், என் கணவர் என்னிடமோ, எனது மகள்களிடமோ, பிரியமாகப் பேசுவதோ, நேரம் செலவிடுவதோ, வெளியில் அழைத்துச் செல்வதோ கிடையாது. விடுமுறை நாட்களில் கூட, மிச்சமிருக்கும் வேலைகளை முடிப்பதற்காக அலுவலகம் சென்று விடுவார். மாலையில் வீட்டுக்கு வந்ததும், அவரது அறையில் தனியாகத் தொலைக்காட்சி பார்த்தபடி அமர்ந்திருப்பார். மகள்கள் இதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆனால் என்னால் கணவரின் செயல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க முடியவில்லை. தனிமை உணர்வு அதிகமாக இருக்கிறது. எனக்கு வழி காட்டுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -

உங்கள் கணவர் இயல்பிலேயே தனிமை அதிகம் விரும்புபவராக இருக்கலாம். நீங்கள் கூறி இருப்பதை பார்க்கும்போது, அவர் குடும்பத்துக்காகவும், வேலைக்காகவும் சமமாக நேரம் ஒதுக்குவதற்கு முன்னுரிமை கொடுப்பதில்லை என்பது புரிகிறது. இந்த மாற்றங்கள் அவர் வங்கியில் உயர் பதவிக்கு வந்தபிறகு ஏற்பட்டதா? என்று கவனிக்கவும். வேலையின் அழுத்தம் காரணமாகவும் அவர் இவ்வாறு நடந்து கொள்ளலாம். வீட்டில் அவரது அறையில் தனிமையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கும்போது, நீங்களும் அவருடன் அமர்ந்து அவருக்குப் பிடிக்கும் நிகழ்ச்சிகளைப் பாருங்கள். இதன் மூலம் உங்கள் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை உண்டாகலாம். இரவு உணவுக்குப் பின்பு, அவருடன் சிறிய நடைப்பயிற்சி செல்லுங்கள். அப்போது இருவரும் மனம் விட்டுப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதிகமாகப் பேசாதது அவரது இயற்கை சுபாவம் எனில், அதை மாற்றுவது கடினம். உங்கள் மகள்கள் மேற்படிப்புக்காகவோ, வேலைக்காவோ, திருமணம் முடித்தோ உங்களைப் பிரிந்து செல்லும்போது, நீங்கள் அதிக தனிமையை உணர நேரிடும். எனவே உங்கள் கணவரின் இயல்பு மாறாதபோது, அதை நினைத்துக் கொள்ளாமல், உங்களுக்கான நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடுவதற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள்.

வாசகியின் கேள்வி 2 :- நான், எனது நண்பரை ஒருதலையாகக் காதலித்து வருகிறேன். ஊரடங்கு காரணமாக நான் இருந்த ஊரிலிருந்து, எனது சொந்த ஊருக்குச் செல்ல வேண்டியதாயிற்று. அன்றிலிருந்து என்னிடம் அவர் சரியாகப் பேசுவதில்லை. தொலைபேசியிலும் ஒரு சில நிமிடங்களுக்குள் பேசிவிட்டு துண்டித்து விடுகிறார். மற்ற நண்பர்களிடம் எப்போதும் போல் பழகும் அவர், என்னிடம் இவ்வாறு நடந்து கொள்ள என்ன காரணம் என்று தெரியாமல் தவிக்கிறேன். அவருடன் பழகுவதைத் தவிர்த்து விடலாமா? என்று எண்ணுகிறேன். இந்த நிலையில் நான் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


கெஞ்சுவதாலோ, நிர்பந்திப்பதாலோ பெறக்கூடியது அல்ல காதல். உங்கள் நண்பர் உங்களை நல்ல தோழியாக மட்டுமே பார்க்கிறார் என்றால், அவரது உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிக்க வேண்டும். உங்கள் தொலைபேசி அழைப்புகளைத் தவிர்ப்பதேன்? என்று அவரிடம் வெளிப்படையாகக் கேட்டு விடுவதே சிறந்தது. எதையும் கேட்காமல் மனதிற்குள் வைத்துச் சிந்தித்துக் கொண்டே இருப்பது, நாளடைவில் உறவில் நஞ்சை விதைக்கும். எனவே வெளிப்படையாகச் செயல்படுவதே இருவருக்கும் நல்லது.


வாசகியின் கேள்வி 3 :- நான் பள்ளி இறுதியாண்டு படித்து வருகிறேன். இயல்பிலேயே கூச்ச சுபாவம் காரணமாக யாரோடும் அவ்வளவாகப் பேசமாட்டேன்.

மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வருகிறேன். அவ்வப்போது அருகில் இருக்கும் கோவிலுக்குச் செல்வேன். போகும் வழியில் எதேச்சையாக பார்த்த ஒருவரை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவரும் நானும் இதுவரை பேசியது இல்லை. அவர் என்னைப் பார்த்ததும் இல்லை. ஆனால் எனக்கு அவரைத் தினமும் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது. தொடர்ந்து அவர் நினைவிலேயே இருக்கிறேன். படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. சில நேரங்களில் இது தவறு என்று யோசிக்கிறேன். ஆனாலும் இதிலிருந்து வெளிவர முடியவில்லை. எனக்கு வழி காட்டுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


இந்த வயதில் இத்தகைய தடுமாற்றங்கள் அனைவருக்கும் வரக்கூடியதுதான். உங்கள் எண்ணங்களுக்காக, வருத்தமோ அல்லது குற்ற உணர்வோ கொள்ள வேண்டாம். உங்கள் வயதில், எதிர்பாலினத்தவரால் நீங்கள் கவரப்படும்போது, உங்கள் உடலில் ஆக்ஸிடோசின், டோபமைன் மற்றும் பைனிலெதிலமைன் எனப்படும் ரசாயனங்கள் சுரக்கும். இவற்றின் தாக்கத்தால்தான், நீங்கள் தொடர்ந்து அந்த நபரைப் பற்றிச் சிந்திக்கிறீர்கள். இது காதல் அல்ல.

இத்தகைய உணர்வில் இருக்கும்போது, அதனால் ஏற்படக்கூடிய எதிர்மறை விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க முடியாது. உங்கள் முடிவெடுக்கும் திறன் பாதிக்கப்படும். எனவே இதைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு, வாழ்வில் முன்னேறுவதற்கான அடுத்த கட்டத்தை நோக்கி மனதை செலுத்துங்கள்.

படிப்பைத் தவிர, உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் நேர்மறையான செயல்களிலும் ஈடுபடுங்கள். இதனால் உங்கள் மனம் ஒருமுகப்படும். உங்கள் விருப்பப்படி நீங்கள் மருத்துவராவதற்கு வாழ்த்துக்கள்.


வாசகியின் கேள்வி 4 :- எனக்குத் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நான் குடும்பத்தைக் கவனித்து வருகிறேன். கடவுள் பக்தி அதிகம் கொண்டவள். தினமும் பூஜை செய்வது வழக்கம். என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு காரணத்தால் பூஜை செய்யவில்லை என்றாலோ அல்லது நான் பூஜை செய்வதற்கு முன்பு அக்கம் பக்கத்தினர் வீட்டில் பூஜை செய்யும் மணியோசை கேட்டாலோ, நான் பக்தியோடு இல்லையோ? என்ற குற்ற உணர்வு தோன்றுகிறது. அன்று முழுவதும் என்னால் எனது வேலைகளைச் சரியாகச் செய்ய முடிவதில்லை. தொடர்ந்து அதையே நினைத்துக் கவலை கொள்கிறேன். இது இயல்பானதா? இல்லை எனக்கு மனநோய் இருக்கிறதா? தயவுசெய்து ஆலோசனை தாருங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதன் காரணம் என்ன? வழிபாட்டு சடங்குகள் நமக்கு ஒழுக்க உணர்வைத் தருகின்றன. ஆனால், அதுவே உங்கள் அன்றாட செயல்பாட்டைப் பாதிக்கிறது என்றால், சரியான காரணங்களுக்காக நீங்கள் அதில் ஈடுபடவில்லை என்று அர்த்தமாகும்.

நீங்கள் உங்கள் அண்டை வீட்டாருடன் போட்டியிடுகிறீர்களா? அல்லது நீங்கள் மிகவும் பக்தியுள்ளவர் என்பதை மற்றவர்களுக்கு நிருபிக்க முயற்சிக்கிறீர்களா? காரணங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். வழிபாட்டு முறைகளில் ஈடுபடுவதற்கான உங்கள் நோக்கம் என்ன? என்று உங்களுக்குள் சிந்தித்துப் பாருங்கள். இந்தக் கேள்விக்கான பதில் உங்களிடம் இருந்தால், உங்களுக்குள் தெளிவு பிறக்கும். நீங்கள் குற்ற உணர்வு கொள்ள மாட்டீர்கள்.


வாசகியின் கேள்வி 5 :- வாழ்க்கையின் மீது அதிக எதிர்பார்ப்பு கொண்டவள் நான். எப்போதும் மற்றவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், என்னை நேசிக்கிறார்களா? என்று மனதில் யோசனை ஓடிக் கொண்டிருக்கிறது. எந்த நேரமும் மனதில் குழப்பம் குடிகொண்டு இருக்கிறது. இதனால் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது. சில நேரங்களில் தற்கொலை எண்ணம் கூடத் தோன்றுகிறது. தனிமையாக இருந்தால் போதும் என்ற மனநிலை உண்டாகிறது. இதைத் தவிர்க்க நான் என்ன செய்ய வேண்டும்?


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


வாழ்க்கையில் குழப்பமடைவது ஆபத்தானது அல்ல. ஆனால், யாரையும் நம்பாமல் இருப்பது, எப்போதும் தனிமையில் இருக்க விரும்புவது, எல்லாவற்றையும் வெறுப்பது மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆபத்தானவை.

உங்கள் வாழ்க்கை உங்களுக்கு முக்கியமானதாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், உங்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட பலருக்கு முக்கியமானது. வாழ்க்கை மதிப்புக்குரியது, அதை விட்டு விடாதீர்கள். தகுந்த மனநல மருத்துவரை உடனே அணுகி சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.


வாசுகியின் கேள்வி 6 :- எனக்குப் பெற்றோர் கிடையாது. மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி இருக்கிறான். வயதான பாட்டியின் ஆதரவில் வளர்ந்தோம். கல்லூரி படிக்கும்போது அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.

கல்லூரியில் உடன் படித்த நண்பரைக் காதலித்து திருமணம் செய்தேன். கடந்த ஐந்து ஆண்டுகளாக நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம். தம்பியை எங்களுடன் வைத்துக் கவனித்து வருகிறோம். எங்களால் முடிந்த மருத்துவ சிகிச்சைகள் அனைத்தும் செய்து விட்டோம். ஆனாலும் அவனது நிலையில் மாற்றம் இல்லை. சமீபகாலமாக அவனது நடவடிக்கைகள் அனைவருக்கும் இடையூறாக இருக்கிறது. கணவர் அவனைக் காப்பகத்தில் சேர்க்கலாம் என்று கூறுகிறார். ஆனால் எனக்கு அவனை வீட்டை விட்டு எங்கும் அனுப்ப மனம் ஒத்துழைக்கவில்லை. இதனால் கணவருக்கும், எனக்கும் கருத்து வேறுபாடுகள் வருகிறது. என்னால் இருவரையும் விட்டுக்கொடுக்க முடியவில்லை. தயவுசெய்து எனக்கு நல்வழி கூறுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


நீங்கள் பல இளம்பெண்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறீர்கள். வாழ்க்கையில் நீங்கள் சந்தித்த துன்பங்கள் அனைத்தையும் பொறுமையோடு கடந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் சகோதரைப் பற்றி முடிவு எடுக்கும் முன்பு, அவருக்கு எது உதவும் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்களால் அவரின் அடிப்படைத் தேவைகளை மட்டுமே நிறைவேற்ற முடியும். ஆனால், அவரைத் தகுந்த சிகிச்சை மையத்தில் சேர்த்து பார்த்துக்கொள்ளும்போது, அங்கு அவருக்குத் தேவையான சிகிச்சைகள், பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் வழங்குவார்கள். இதனால் உங்கள் காலத்திற்கு பிறகும், அவர் அவருக்கான வாழ்க்கையை சரியான முறையில் வாழ முடியும்.


உங்களுக்கும், உங்கள் சகோதர்க்கும் துணையாக இருக்கும் உங்கள் கணவருக்கு நன்றி உள்ளவராக இருங்கள். உங்கள் சகோதரரைத் தகுந்த மையத்தில் சேர்த்து விடுவதால், நீங்கள் அவரைக் கைவிடுவதாக அர்த்தம் ஆகாது. நீங்கள் உங்கள் கணவரோடு வாழ வேண்டிய வாழ்க்கையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். உங்களுக்கு ஏன் குழந்தை இல்லை என்று நீங்கள் குறிப்பிடவில்லை. அது எதுவாக இருந்தாலும், கணவரோடு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.


வாசகியின் கேள்வி 7 :- நான் ஒரு பட்டதாரி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். பெற்றோர் என் விருப்பத்திற்கு மாறாக, எனது உறவுக்காரரை திருமணம் செய்து வைத்தனர். எனக்கு அந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாத காரணத்தால், நான் அவரை விவாகரத்து செய்து விட்டேன். ஆனால் என் பெற்றோர் என்மீது எந்தப் பாசமும் இல்லாமல், நான் விவாகரத்து செய்தவருக்குத் தீவிரமாகப் பெண் பார்த்து மறுமணம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்கள். பெற்ற பிள்ளைகள்மீது சிறிதளவும் பாசம் இல்லாத பொறுப்பற்ற பெற்றோரை நினைத்து வேதனையாக உள்ளது. இதிலிருந்து வெளியே வர ஆலோசனை தாருங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


உங்கள் விவாகரத்துக்கு நீங்கள் தான் காரணம் என்று உங்கள் பெற்றோர் நினைக்கிறார்கள் என்று தோன்றுகிறது. உங்கள் விவாகரத்துக்கான காரணத்தை நீங்கள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. எதுவாக இருந்தாலும், இப்போது விவாகரத்து முடிந்துவிட்டது. எனவே உங்கள் வலி மிகுந்த அனுபவத்திலிருந்து நீங்கள் எவ்வாறு சிறந்த முறையில் வெளிவர முடியும் என்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்க்காமல், நீங்கள் தன்னிறைவு அடைந்து உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள்.


பெற்றோராக, அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்று சிந்திக்கவும், உணரவும் அவர்களுக்கு உரிமை உண்டு. நீங்கள் படித்தவர், உழைக்கிறீர்கள், நீங்கள் துன்பங்களைச் சந்தித்தாலும், உலகை எதிர்கொள்ளும் வலிமையான பெண்ணாக உங்களை உருவாக்க வேண்டும். நீங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நீங்களே ஆதரவாகவும், பொறுப்பாகவும் இருங்கள். உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவு தருவார்கள் என்று எதிர்பார்ப்பதை தவிர்த்திடுங்கள்.


வாசகியின் கேள்வி 8 :- நான் காதல் திருமணம் செய்தவள். நானும், கணவரும், மாமியார் மற்றும் நாத்தனார்களோடு கூட்டுக் குடும்பமாக வசிக்கிறோம். எனக்குச் சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. ஆனால், தலை பிரசவத்துக்காக என்னை எனது தாய் வீட்டுக்கு அனுப்பவில்லை. அவர்கள் யாரையும் என்னைப் பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. கணவர் வீட்டினர், எனது குழந்தையை நான் பாலூட்டும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் என்னிடமிருந்து பிரித்தே வைத்திருக்கிறார்கள். இவை அனைத்தையும் அறிந்திருந்தும் எனது கணவர் எதையும் கண்டுகொள்வதில்லை. நான் சொந்தமாகத் தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் கொண்டவள். ஆனால் மாமியார் மற்றும் குடும்பத்தினர் அதற்கு அனுமதிக்கவில்லை. இந்தப் பிரச்சினைகளையெல்லாம் எவ்வாறு கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறேன். எப்போதும் தைரியமாக இருக்கும் எனக்குத் தற்போது எதிர்மறையான எண்ணங்கள், பயம் போன்றவை அடிக்கடி வருகிறது. இவை அனைத்தையும் நான் சமாளித்து மீள்வதற்கு வழி காட்டுங்கள்.


மருத்துவர்.சங்கீதா மகேஷ் அவர்களின் பதில் : -


சமீபத்தில்தான் குழந்தை பிறந்ததாகக் கூறியிருக்கிறீர்கள். எனவே உங்கள் உடலும், மனமும், கர்ப்பம் மற்றும் பிரசவத்தின்போது ஏற்பட்ட மாற்றங்களிலிருந்து முதலில் குணமடைய வேண்டும். நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதை நான் முழுமையாகப் புரிந்து கொள்கிறேன். தவறாக நடக்கும் எல்லாவற்றையும் பற்றி அதிகமாகச் சிந்திக்காதீர்கள், வருத்தப்படாதீர்கள். இந்தக் கட்டத்தில் உங்கள் குழந்தைமீது மட்டும் கவனம் செலுத்துங்கள். குழந்தையின் சிறிய செயல்களில் மகிழ்ச்சியை உணருங்கள். உங்கள் குழந்தையைத் தொடும் போதெல்லாம் ஆனந்தத்தை உணருங்கள். மற்ற விஷயங்கள் அனைத்தையும் உங்களால் நிச்சயம் சரிசெய்ய முடியும். இது அதற்கான நேரம் அல்ல. எனவே இப்போது நீங்களும், உங்கள் குழந்தையும் பகிர்ந்து கொள்ளும் பொன்னான சிறிய தருணங்களைத் தவறவிடாதீர்கள். தாய்மையை அனுபவியுங்கள்.


நன்றி : தினத்தந்தி 


இந்தப் பதிவைப் படிக்கும்“ வாசகர் - வாசகிகள் “ அனைவரும் இந்தப் பதிவின் கீழ் இருக்கும்“ பின்னூட்டம் பெட்டி“ (comment box) யில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். வேண்டுகோள் இது.


இப்படிக்கு தேவதை தொடக்கம் அறிய இங்கே சுட்டவும்


இப்படிக்கு தேவதை பாகம் ஒன்றை படிக்க இங்க சுட்டவும்


இப்படிக்கு தேவதை பாகம் இரண்டை படிக்க இங்க சுட்டவும்


இப்படிக்கு தேவதை பாகம் மூன்றை படிக்க இங்க சுட்டவும்


இப்படிக்கு தேவதை பாகம் நான்கை படிக்க இங்க சுட்டவும்


இப்படிக்கு தேவதை  மறக்க முடியாத வாசகிகளின் கேள்வியும் மருத்துவரின் அருமையான பதில்களும்.தினத்தந்தி ஞாயிறு நாளிதழில் இலவச இணைப்பாகத் தேவதை என்ற புத்தகம்.வாசகிகள் கேட்கும் கேள்விகளுக்கு மருத்துவர் பதில் சொல்லும் பக்கம்.


#தினத்தந்தி #வழிகாட்டி #இப்படிக்குதேவதை #தேவதை

#இலவசஇணைப்பு #கேள்விபதில் # வாசகிகள்

# உளவியல் #உளவியல்நிபுணர் #மருத்துவர் #சங்கீதாமகேஷ்


கருத்துரையிடுக

0 கருத்துகள்

Top Post Ad

Below Post Ad